ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாருக்கு ம.பி.யில் 108 அடி உயர சிலை: முதல்வர் சவுகன் திறந்து வைத்தார்!!
இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார். இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது: கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.