ஆபத்தான வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வருவதாகக் கூறப்படும் நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“நிபா வைரஸ், 1999 ஆம் ஆண்டு மலேசியாவில் பன்றி பண்ணைகளில் பணியாற்றிய ஒரு குழுவினரிடையே முதன்முதலில் கண்டறியப்பட்டது. வைரஸினால் பாதிக்கப்பட்ட பன்றிகளின் திசுக்கள், உடல் திரவங்கள் மற்றும் மலங்களை பாதுகாப்பற்ற முறையில் கையாளுவதால் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியது.
அதன் பிறகு, மலேசியாவில் இருந்து எந்த தொற்றாளர்களும் பதிவாகவில்லை.
எனினும், 2001 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் கிழக்கு இந்தியாவில் இந்த நோய் மீண்டும் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில், கேரளா கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த தொற்றுநோயை எதிர்கொள்கிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷில் இந்த நோய்த்தொற்றுகள், இயற்கையாகவே நிபா வைரஸைக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட வௌவால்களின் சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் படிந்த பழங்கள்/சாறுகளை மனிதர்கள் உட்கொள்வதால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய அறிவியல் தரவுகளின்படி, இந்த நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுவதில்லை.
நோய்வாய்ப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் மலக்கழிவுகள் மூலம் இது பரவ வாய்ப்புள்ளது எனவும் நோயாளிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களுக்கே அடிக்கடி தொற்று ஏற்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் உடலில் நுழைந்த 4-14 நாட்களுக்குள், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அடிப்படை அறிகுறிகள் ஏற்படும்.
அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு அறிகுறிகளுக்கான சிகிச்சை பொதுவான நடைமுறையாகும்.
மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதைத் தடுக்க, நோயாளிகளைக் கையாளும்போது, பாதுகாப்பான நடைமுறைகளில் அவர்களின் உடல் திரவங்களை வெளியேற்றும் முறைமையை பின்பற்ற வேண்டும்.
இதனை தடுக்க தற்போது தடுப்பூசி எதுவும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிபா நோய் பரவும் போது, அது தொடர்பில் பொது சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், இலங்கையர்கள் இது குறித்து அறிவுடனும் கவனத்துடனும் இருப்பது போதுமானது” என சுகாதார மேம்பாட்டு பணியகம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.