எதற்கெடுத்தாலும் புலிகள் மேலேயே பழி போடுவர் !!
முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் போராடி சர்வதேச விசாரணை கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் தங்கியிருந்த போது படுகொலை செய்யப்பட்ட எமது மக்கள் தொடர்பிலும் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சனல் 4 ஆவணப் படம் உண்மையானதா பொய்யானதா என்று சொல்வதனை விட இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரினதும் கருத்தாகவுள்ளது. அந்தவகையில் எமது ஆண்டகை மல்கம் ரஞ்சித்தை பாராட்டுகின்றேன்.
கூடுதலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டு கிறிஸ்தவ, தமிழ் முஸ்லிம் உறவை பிரிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி இருக்கின்றது. ஆகவே கர்தினால் விடாத முயற்சியாக இது தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென கோருகின்றார். நாங்களும் அதனைத்தான் கோருகின்றோம். படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருப்பதனால் உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது.
கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு ஒரு பணிவான வேண்டுகோளை இந்த உயரிய சபை ஊடாக விடுக்கின்றேன். போர் காலத்திலே எமது பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் தங்கி இருந்த மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். பாடசாலைப் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டார்கள், எமது பிரதேசங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டன.
ஆகவே உங்களுடைய நீதிகோரும், சர்வதேச விசாரணை கோரும் அந்த விடாப்பிடி என்பது மனித நேயம் என்பது வடக்கு, கிழக்கிலே நடந்த படுகொலைகளுக்கும் தேவை. உங்கள் குரல் எமது பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் உரத்து ஒலிக்க வேண்டுமென வேண்டுகின்றேன்” என்றார்.