அப்புஹாமியின் கருத்தை ஏற்றார் அமைச்சர் டிரான் !!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், மேலும் தெரிவிக்கையில்,
புதன்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹெக்டர் அப்புஹாமி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் அப்போது வகித்த பதவி மற்றும் சேவை நிலையம் தொடர்பிலான கேள்விகளை வினவினார்.
அறிக்கையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு நான் அறிக்கையில் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று பதிலளித்தேன். இதனை நான் திருத்திக் கொள்கிறேன்.
அத்துடன் தவறான விடயத்தை குறிப்பிட்டதையிட்டு கவலையடைகிறேன்.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். நிலந்த ஜயவர்தன மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் உள்ளதா என்பதை பரிசீலனை செய்யுமாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதன்போது எழுந்த அப்புஹாமி எம்.பி, “அமைச்சர் உண்மையை ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சிக்குரியது. ஆனால் நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறுவதனை ஏற்க முடியாது. மீண்டும் அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அதுவும் தெரிய வரும்” என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!! (கட்டுரை)
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!