;
Athirady Tamil News

நிறைவேறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

0

பாராளுமன்றத்தில் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். இது நிறைவேற்றப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

இரவில் மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவ்வாறு 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து, கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து பெண் எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதன்பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.