ஆந்திராவில் இளைஞர்களை கவர பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு கண்காட்சி!!
ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக என்.டி. ராமராவ் மகள் புரந்தேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை வளர்க்க பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 2-ந் தேதி வரை கொண்டாட மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பிரதமர் மோடியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைகள் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுவயதில் மோடி ஒரு நீர் நிலையிலிருந்து முதலைக்குட்டியை கையில் எடுத்து தைரியமாக பிடித்து வைத்திருப்பது போன்ற படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இது போன்ற படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குஜராத்தில் பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிறகு மோடி எப்படி குஜராத்தை பொருளாதார சக்தியாக மாற்றினார் என்பது குறித்து படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மோடி பிரதமராகி உலக அரங்கில் இந்தியா சரியான இடத்தை பிடிக்க உதவினார். அதற்காக அவர் முழு பாராட்டிற்கு தகுதியானவர். மோடியின் அடிச்சுவடுகளை பின்பற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.