அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் நியூயார்க் நகரம்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி…!
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நியூயார்க் நகரத்தின் கடல் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது என்று தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு நேற்று பெய்த கனமழை காரணமாக தெருக்கள், சுரங்க பாதைகள், விமான நிலையம் உள்ளிட்டவற்றில் வெள்ள நீர் தேங்கியது.
ஏற்கனவே பலமுறை இதுபோன்ற நிகழ்வுகளை நியூயார்க் நகரம் சந்தித்துள்ளது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசம் அடையும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இங்குள்ள வடிகால்கள் ஒரு மணி நேரத்திற்கு 1.75 இன்ச் மழையளவை கையாளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று 2 இன்ச் அளவுக்கு மழை பெய்ததால் வடிகால்கள் உடைந்து வெள்ளம் தேங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென அங்கு கனமழை பெய்துள்ளது. நியூயார்க்கின் உட்கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை விடவும் பருவநிலை மிகவும் சவாலாக இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மனித செயல்பாடுகளால் ஏற்படும் பருவநிலை மாற்ற விளைவுகள் நியூயார்க் நகரத்தை மட்டுமல்லாமல் உலக நாடுகளின் முக்கிய நகரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க் நகரத்தில் உள்ள வடிகால்கள் அமைப்பு மழை நீரை அதே குழாய்களில் உள்ள கழிவு நீருடன் இணைக்கிறது. குழாய்களில் ஓட்டம் அதிகமாக இருக்கும்போது தண்ணீர் உள்ளூர் நீர்நிலைகளுக்குள் நுழைகிறது. பாதாள சாக்கடை தூர் வாரப்படாததால் அசுத்தமான கழிவு நீர் குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் அடித்தளங்களில் தேக்கம் அடைகிறது.
இந்த அசாதாரண மழை மற்றும் வெள்ளம் காரணமாக நியூயார்க் மற்றும் அமெரிக்காவின் மற்ற பகுதியை சேர்ந்த அறிவியலாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக பெருங்கடல்களில் வெப்பம் அதிகரித்து, மற்ற பகுதிகளில் மழையை தூண்டி வெள்ளத்தை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.