கர்நாடகாவில் கொண்டாடப்படும் விநோத பெளர்ணமி தேங்காய் போட்டி
இந்தியா பன்முக கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட நாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது உண்டு. தமிழகத்தின் சில இடங்களில், வேண்டுதலின் பேரில் தலையில் தேங்காய் உடைக்கப்படும் நிகழ்வு குறித்த வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
கர்நாடக மாநிலம், கொங்கன் பகுதியிலும் இதுபோன்ற வினோதமான முறையில் தேங்காய் உடைப்பு திருவிழா நடைபெறுகிறது. போட்டியில் இரண்டு ஆண்கள் கலந்து கொள்கின்றனர். இருவர் கைகளிலும் தேங்காய்கள் உள்ளன. ஒருவர் தேங்காயை உள்ளங்கையில் தாங்கிப் பிடித்திருக்க, மற்றொருவர் தன் கையில் இருக்கும் தேங்காயை கொண்டு அதனை உடைக்கிறார். போட்டியாளர்களுக்கு அருகாமையில் நிற்கும் நபர்களுக்கு தேங்காய் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் யார் அதிகமான தேங்காய்களை உடைக்கிறார்களோ, அவர்கள் மொத்த தேங்காய்களையும் பரிசாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விழாவுக்கு பெயரே ‘தேங்காய் பௌர்ணமி’ என்று வைத்துள்ளனர். அதாவது பௌர்ணமி தினத்தில் தான் இந்த விழா நடத்தப்படுமாம். ஒருவரின் திறனை சோதிக்கும் விதமாகவும், குதூகலத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கொங்கன் பகுதியானது மகாராஷ்டிர மாநில எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். கடலோரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தான் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
மற்ற பகுதி மக்களைப் பொருத்தவரையில், இதுவரையிலும் பார்த்திராத புதுமையான வகையில் இந்த திருவிழா அமைந்திருப்பதால் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. எண்ணற்ற மக்கள் லைக் செய்துள்ள நிலையில், பலரும் இதைப் பாராட்டும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “பழைய பாரம்பரிய முறைப்படி பொழுதுபோக்கு விழாக்களை நடத்துவது சிறப்புக்குரியது. அதிலும் இந்த வகை விழாக்கள் மூலமாக சமூக ஒற்றுமை பெருகும்’’ என்று கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் இதேபோன்ற விழா கொண்டாடப்படுகிறது என்று மற்றொரு பதிவர் தெரிவித்துள்ளார். போட்டியின்போது கை உடைந்துவிட்டால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று மற்றொரு கமெண்டில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.