அமைதிக்கான நோபல் பரிசை பெறாத மகாத்மா காந்தி…கிடைக்காததன் பின்னணி..!
அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காக மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம்தேதி பிறந்தார். அகிம்சை வழியிலான அவரது தலைமையில் நடந்த போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடியை கொடுத்ததுடன், இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வன்முறையை தவிர்ப்பது, சமூக நல்லிணக்கம் என அமைதிக்காக போராடிய மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. 1937, 1938, 1939, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் அவரது பெயர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்றும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் சிக்கலானவை என்றும் பலதரப்பட்டவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோபல் பரிசு கமிட்டிக்கு வழக்கமாக பின்பற்றும் விதிமுறைகள் உள்ளன. அவை எதிலுமே மகாத்மா காந்தி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. காந்தி அரசியல்வாதியாக செயல்படவில்லை, அவர் சர்வதேச சட்டங்களையும் ஆதரிக்கவில்லை. மனித நேய நிவாரண பணிகளை காந்தி மேற்கொண்டது கிடையாது. மேலும் சர்வதேச அமைதிக்காக அவர் பணியாற்றவில்லை என்ற காரணங்கள் நோபல் கமிட்டி தரப்பில் கூறப்படுகிறது.
அமைதி வழியில், அகிம்சை முறையில் காந்தியடிகள் போராடியது வரலாற்றை மாற்றியது. இருப்பினும், இந்த அகிம்சை வழி போராட்டங்களை நோபல் பரிசு கமிட்டியால் அமைதிக்கான விருது என்ற பிரிவுக்கு வரையறை செய்ய முடியவில்லை.
மேலும் 1947-இல் ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பார்வை நோபல் பரிசு கமிட்டிக்கு உள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று உறுதியாக நம்பியுள்ளனர்.
1948 ஜனவரி 30 ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த 2 நாட்களில் நோபல் பரிசுக்கான பரிந்துரை நிறைவு பெற்றதும் அவருக்கு கிடைக்காததற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
மரணத்திற்கு பின்னர் காந்திக்கு நோபல் பரிசு வழங்கியிருக்கலாம். இருப்பினும் அவருக்கு ஒரு அமைப்பு இல்லாதததும், அவருக்கான பரிசு தொகையை யார் பெறுவது என்பதில் இருந்த சிக்கலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மரணத்திற்கு பின்னர் யாருக்கும் நோபல் பரிசை அளிக்க கமிட்டி விரும்பவில்லை என்று நார்வே நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுனர் கின்னர் ஜான் கூறியுள்ளார்.
இவ்வளவு நடந்தாலும் பின்னாளில் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு அளிக்கப்படாதது குறித்து நோபல் பரிசு கமிட்டி வருத்தம் தெரிவித்தது. 1989-இல் புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு அமைதிக்கான விருது அளிக்கப்பட்டது. அப்போது மகாத்மா காந்திக்கு செய்யும் மரியாதையில் இதுவும் ஒன்று என நோபல் பரிசு கமிட்டி உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.