;
Athirady Tamil News

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சுமந்திரனுக்கு நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதைப் போன்று வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2020.10.20 ஆம் திகதி நாடாளுமன்ற உரை ஊடாக நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார்.

உயர்நீதிமன்றம் பயனற்றது, உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார்.

சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை பிறிதொருவர் விமர்சிக்கவில்லை. பிறிதொருவர் விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இவரே (சுமந்திரனை நோக்கி) நீதிமன்றத்தை மலினப்படுத்தினார் என்று சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. நான் நீதிமன்றத்தை விமர்சித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு நான் உரையாற்றவில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.