;
Athirady Tamil News

நீதிபதிக்கே கிடைக்காத நீதி?

0

கடந்த வாரம் திலீபன்.இந்த வாரம் ஒரு நீதிபதி.முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது.இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு.” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கியது” என்று.

இலங்கை நாடாளுமன்றம் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை அச்சமின்றிக் கூறும் ஓரிடமாகக் காணப்படுகின்றது. நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் நீக்கப்படாத வெறுப்புப் பேச்சுக்களைத் தொகுத்தாலே போதும், இனப்பிரச்சினையின் ஊற்றுக்களை;இனப்படுகொலையின் ஊற்றுக்களைத் தெளிவாகக் காணலாம்.சரத் வீரசேகர ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினராக முல்லைத்தீவு நீதிபதியை அவமதிக்கவில்லை.அவர் ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலைத்தான் பிரதிபலித்தார். ஒரு நாடாளுமன்றத்தின் அபகீர்த்திமிக்க ஒரு பாரம்பரியத்தின் ஆகப்பிந்திய வாரிசு அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனின் வீட்டை கற்களால் தாக்குமாறு தனது ஆதரவாளர்களை ஏவியதாக குற்றம் சாட்டப்படுகிறது.எந்தப் பிரதம நீதியரசரின் முன் அவர் பதவியேற்றாரோ,அதே பிரதம நீதியரசரின் வீட்டைத் தாக்குமாறு குண்டர்களே ஏவி விட்டார்.ராஜபக்சக்கள் இலங்கைத் தீவின் முதற் பெண் பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்காவை நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கினார்கள்.தங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசர்களையே அவமதிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில், ஒரு மாவட்ட நீதிபதிக்கு இவ்வாறு நடந்தமை புதுமையானது அல்ல.

அதுமட்டுமல்ல இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு.சட்டம்,நீதி பரிபாலனக் கட்டமைப்பு போன்றவை சுயாதீனமானவை என்று கூறப்படுவது ஒரு தோற்றமாயைதான். ஜனநாயக இதயம் செழிப்பாக இருக்கும் ஒரு நாட்டில் நீதிபரிபாலனத் துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே வலு வேறாக்கம் இருக்கக்கூடும். ஆனால் ஜனநாயகத்துக்குப் பதிலாக இனநாயகம் பயிலப்படும் ஒரு நாட்டில்,இனநாயகத்தின் பாதுகாப்பிடமாகக் காணப்படும் ஒரு நாடாளுமன்றம் இனரீதியாக பாரபட்சமுள்ள சட்டங்களைத்தான் நிறைவேற்றும்.அதாவது ஓர் அரசுக் கட்டமைப்பின் அரசுக் கொள்கை எதுவோ அதைத்தான் அவர்கள் சட்டமாக நிறைவேற்றுவார்கள்.அந்த சட்டத்தைத்தான் நீதிபரிபாலானக் கட்டமைப்பு அமுல்படுத்தும்.அதாவது சட்டமும் நீதிபரிபாலனக் கட்டமைப்பும் அரசின் உபகரணங்கள்தான்.இதில் சில தனிப்பட்ட நீதிபதிகள் அந்த சிஸ்டத்தின் கைதிகளாக இருக்க மறுக்கும் பொழுது நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரும்.

சட்டம் என்பது அதிகாரத்தின் சேவகன்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சிக் கொள்கையை அமுல்படுத்த சட்டங்களை இயற்றுவார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம்,இப்பொழுது விவாதிக்கப்படும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம்,நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் போன்ற எல்லாமே ஒடுக்கும் அரசுக்கட்டமைப்பின் உபகரணங்களே.இவை மட்டுமல்ல பெருந்தொற்று நோய்க் காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டமானது தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இதுதொடர்பில் அதிகம் பகிரப்படும் ஓர் ஆங்கிலக் கூற்று உண்டு.”தென்னாபிரிக்காவின் இனஒதுக்கல் சட்டபூர்வமாகத்தான் செய்யப்பட்டது.ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை புரிந்தமை சட்டபூர்வமாகத்தான் செய்யப்பட்டது.அடிமை முறைமை சட்டபூர்வமானது. கொலோனியலிசம் அதாவது குடியேற்றவாதம் சட்டபூர்வமானது.எது சட்டபூர்வமானது என்பது நீதியின் பாற்பட்ட ஒரு விவகாரம் அல்ல.அது அதிகாரத்தின் பாற்பட்ட ஒரு விவகாரமே”

இலங்கைத்தீவில் நாடாளுமன்றம் இனரீதியிலான அதிகாரத்தைப் பிரதிபலிக்கும்போது இங்கு சட்டமும் அந்த அதிகாரத்தின் சேவகனாகவே காணப்படும்.இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்துத்தான் முல்லைத்தீவு நீதிபதியின் விவகாரத்தைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியெனப்படுவது ஏற்கனவே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது.2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான அல்லது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம் எனப்படுவது உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. உள்நாட்டு நீதி போதுமாக இருந்தால் எதற்காக நிலைமாறு கால நீதி என்ற அனைத்துலக ஏற்பாட்டைக் குறித்துச் சிந்திக்க வேண்டி வந்தது?

மேலும் அண்மையில் வெளியிடப்பட்ட சனல் நாலு வீடியோவும் உள்நாட்டு நீதி தொடர்பாக ஏற்கனவே உள்ள சந்தேகங்களைப் பலப்படுத்துகின்றது.

கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 56/1 தீர்மானத்தின் அடிப்படையில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்துத் தொகுப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படத்தக்கவை.அவை நிச்சயமாக இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்பிடம் வழங்கப்படப் போகும் தகவல்கள் அல்ல.இலங்கைத் தீவின் உள்நாட்டுப் புலனாய்வுக் கட்டமைப்பு மற்றும் நீதிபரிபாலான கட்டமைப்பு என்பவற்றின் மீதான நம்பகத்தன்மையை அந்த அலுவலகம் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.

இவ்வாறான அனைத்துலகச் சூழலில்தான் முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நடந்திருக்கிறது. இது பொறுப்புக் கூறல் தொடர்பில் இலங்கைத் தீவின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மேலும் பலப்படுத்தக்கூடியது. தமிழ் மக்கள் ஏன் அனைத்துலக விசாரணையைக் கேட்கின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆகப்பிந்திய சான்று இது.

தென்னிலங்கையில் உள்ள பேராயர் மல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அனைத்துலக விசாரணை குறித்த தமது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் ஓர் அரசியல் சூழலில், இந்த விவகாரம் தமிழ் நோக்கு நிலையில் பொருத்தமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. பேராயர் மல்கம் ரஞ்சித்,மைத்திரிபால சிறிசேனா போன்றவர்கள் தொடக்கத்தில் அனைத்துலக விசாரணை தேவை என்று கேட்டார்கள். ஆனால் இப்பொழுது அவர்களுடைய கோரிக்கை தளம்பத் தொடங்கி விட்டது. சிங்கள பௌத்த கூட்டு உளவியலைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தளம்பத் தொடங்கி விட்டார்கள்.எந்த ஒரு கூட்டு உளவியலின் பிரதிநிதியாக சரத் வீரசேகர பேசுகிறாரோ, அதே கூட்டு உளவியலின் வெவ்வேறு முகங்கள்தான் பேராயரும் முன்னாள் ஜனாதிபதியும்.

எனவே அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை தமிழ் மக்கள் பெரும்பாலும் தனியாகத்தான் முன்னெடுக்க வேண்டியிருக்கும்.ஆனால் அதைக்கூட ஒரு கட்சியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக பல கட்சிகளாக முன்னெடுப்பதே பலம்.

கடந்த கிழமை திலீபன்,இந்தக் கிழமை ஒரு நீதிபதி….என்றவாறாக தமிழ் மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் புதிய புதிய விடயங்களின் மீது குவிக்கப்படுகின்றது.ஆனால் அவை வெவ்வேறு விடயங்கள் அல்ல.ஒரே ஒடுக்கும் கட்டமைப்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளே அவை.அவற்றை அவற்றுக்கேயான ஒட்டுமொத்த வரைபடத்துக்குள் வைத்து தமிழ்மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.அதாவது ஒடுக்குமுறைக்கு ஒரு நீண்ட கால வழி வரைபடமும் மாறாத நிகழ்ச்சி நிரலும் ஒன்றிணைந்த செயல்பாடும் உண்டு.

எனவே அதற்கு எதிரான போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.தாயகம், புலம்பெயர் சமூகம், தமிழகம் ஆகிய மூன்று தரப்புகளும் ஒன்றிணைந்து அந்தக் கோரிக்கையை உக்கிரமாக முன்வைக்க வேண்டும். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களை நோக்கி செல்வதற்கான வழி வரைபடம் ஒன்று தமிழ் கட்சிகளிடமும் செயற்பாட்டாளர்களிடமும் இருக்க வேண்டும்.

அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை ஐநாவுக்கு எழுதும் கடிதங்களில் மட்டும் இருந்தால் போதாது.அல்லது ஐநாவின் பக்க நிகழ்வுகளில் அல்லது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் உரைகளில் இருந்தால் மட்டும் போதாது.அல்லது ஊடகங்களுக்கு வழங்கப்படும் நேர்காணல்களில் இருந்தால் மட்டும் போதாது.அல்லது தேர்தல் கால விஞ்ஞாபனங்களில் இருந்தால் மட்டும் போதாது.அதற்குமப்பால்,அதைவிட ஆழமான பொருளில், அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அனைத்துலக விசாரணையைக் கோருவது அல்லது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றங்களை நோக்கி விவகாரத்தை எடுத்துச் செல்வது போன்றன அறநெறியின் பாற்பட்ட அல்லது நீதிநெறியின் பாற்பட்ட கோரிக்கைகள் அல்ல.அவை முழுக்க முழுக்க வெளியுறவுச் செயற்பாடுகள்.பலம் வாய்ந்த நாடுகள் அப்படி ஒர் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.ஏனென்றால் இந்த பூமியிலே தூய நீதி என்று எதுவும் கிடையாது.அரசியல் நீதிதான் உண்டு.நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும்,அரசியல் நீதி என்பது நாடுகளுக்கு இடையிலான அரசியல்,பொருளாதார,படைத்துறை நலன்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதுதான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.