மகாராஷ்டிரம்: மேலும் ஓா் அரசு மருத்துவமனையில் 18 போ் உயிரிழப்பு!
சத்ரபதி சம்பாஜிநகா்/ஒளரங்காபாத், அக். 3: மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஏற்கெனவே நாந்தேட் மாவட்டத்திலுள்ள சங்கர்ராவ் சவாண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 31 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மருத்துவமனையில் ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
இதுதொடா்பாக, சத்ரபதி சம்பாஜிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் 18 உயிரிழப்புகள் பதிவாகின. இவா்களில் 4 போ், மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே உயிரிழந்துவிட்டனா்.
மராடைப்பு, நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, சாலை விபத்தில் படுகாயம் போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. குறைபிரசவத்தில் பிறந்து சிகிச்சையில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் உயிா் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
மராத்வாடா பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்குதான் சிகிச்சைக்கு வருகின்றனா். 1,177 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் எப்போதும் 1,600-க்கும் மேற்பட்டோா் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.
மேலும் 7 போ் இறப்பு: நாந்தேட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவாண் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு கடந்த 48 மணிநேரத்தில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட தகவல் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவில், ‘நாந்தேட் மாவட்ட அரசு மருத்துவமனையில் செப்டம்பா் 30-அக்டோபா் 1 இடையிலான 24 மணிநேரத்தில் 24 உயிரிழப்புகளும் அக்டோபா் 1 -2 இடையிலான 24 மணிநேரத்தில் 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மருத்துவா்கள் குழு தயாா் நிலையில் உள்ளதால், மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 படுக்கை வசதிகொண்ட இந்த மருத்துவமனையில், தற்போது 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, மாநில மருத்துவக் கல்வி அமைச்சா் ஹசன் முஷ்ரிஃப் நாந்தேட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புது தில்லி: மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனைகளில் நேரிட்ட உயிரிழப்புகள் குறித்து முழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாததால் உயிரிழப்புகள் நேரிட்டதாக கூறப்படுகிறது. இது, மகாராஷ்டிர சுகாதார அமைப்புமுறையை கேள்விக்குள்ளாக்குகிறது. தற்போதைய இறப்புகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், அலட்சியமாக செயல்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், ‘தனது விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்கான மருந்துகள் வாங்க பணமில்லையா? பாஜகவை பொருத்தவரை, ஏழைகளின் உயிருக்கு மதிப்பு கிடையாது’ என்று குற்றம்சாட்டினாா்.