கொச்சி டூ கத்தார்…நேரடி விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா நிறுவனம்..!
கேரள மாநிலத்தின் வணிக தலைநகராக கருதப்படும் கொச்சி மாநகரில் இருந்து, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு நேரடி விமான சேவையை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி புதிய சேவை தொடங்கும் என்றும், தினசரி அடிப்படையில் விமானம் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரள மக்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் உள்ளனர் என்ற நிலையில், இந்த விமான சேவை அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது. விமான எண் ஏஐ953 என்ற விமானம் இந்திய நேரப்படி கொச்சி விமான நிலையத்தில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு சென்று, தோஹா நகருக்கு கத்தார் நேரப்படி 3.45 மணிக்கு சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக ஏஐ954 என்ற விமானம் தோஹா விமான நிலையத்தில் கத்தார் நேரப்படி 4.45 மணிக்கு புறப்பட்டு, கொச்சி நகருக்கு 11.35 மணிக்கு வர உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திடம் பல சொகுசு வசதிகளை கொண்டதாக உள்ள ஏ320நியோ என்ற விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த விமானத்தில் மொத்தம் 162 இருக்கைகள் இருக்கும் என்ற நிலையில் பயணிகளுக்கு சௌகரியமான பயண அனுபவம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் 150 இருக்கைகள் எக்கானிமி பிரிவிலும், 12 இருக்கைகள் சொகுசு மிகுந்த பிஸ்னஸ் வகுப்பிலும் இடம்பெற உள்ளன. இதேபோல இன்னும் சில விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் அண்மைக்காலங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
புதிய மற்றும் நவீன விமானங்களை கொண்டு தங்கள் நிறுவனத்தின் சேவையை சிறப்புமிக்கதாக மாற்ற ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமான போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும் ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது.
முன்பதிவு தொடக்கம் :
கொச்சி மாநகரில் இருந்து தோஹா நகருக்கு செல்ல இருப்பவர்கள் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கி விட்டது. கொச்சி மற்றும் தோஹா நகரங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இருநாட்டு மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்றும், வெவ்வேறு கலாச்சாரங்களை புரிந்து கொள்ள உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.