அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா நர்கடே!
பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன ஸ்டார்ட்-அப்கள் வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் தொழில் முனைவோராக செழித்து வருகின்றனர். வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு உதாரண பெண்ணாக நேஹா நர்கடே திகழ்கிறார்.
நேஹா நர்கடே கிளவுட் நிறுவனமான கன்ஃப்ளூயன்ட்டின் இணை நிறுவனர் ஆவார். இவர் 520 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் 100 அமெரிக்க பணக்கார பெண்களின் பட்டியலில் 50-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2022-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, நேஹா 490 மில்லியன் டாலர் சொத்துடன் முதல் 100 பெண்கள் பட்டியலில் 57-வது இடத்தைப் பிடித்திருந்தார்.
நேஹா மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்து வளர்ந்தவர். சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் ஜார்ஜியா டெக்கில் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். லிங்க்ட்இனில், அப்பாச்சி காஃப்கா எனப்படும் மெஸ்சேஜ் அனுப்ப உதவும் அமைப்பை உருவாக்க உதவினார்.
தனது வெற்றிக்கு காரணமானவர் என தன் அப்பாவை குறிப்பிடும் நேஹா, CNBC-க்கு அளித்த பேட்டியில், தனது தந்தை வெற்றிக்காக கண்ணாடி கூரையை உடைத்த பெண்களைப் பற்றிய கதைகள் அடங்கிய புத்தகங்களை தனக்காக தேர்ந்தெடுத்து சொன்னதாக சொன்னார்.
இந்திரா காந்தி பற்றிய புத்தகங்களை தான் படித்ததாக நேஹா நர்கடே கூறினார். இந்திரா நூயி மற்றும் கிரண் பேடியின் வாழ்க்கை வரலாற்றையும் படித்துள்ள அவர், இந்தக் கதைகளைப் படிப்பது அவருக்குள் ஒரு சக்தியை வளர்த்ததாகக் கூறினார். நேஹா நர்கடே கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசிக்கிறார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 4296 கோடி ரூபாய்.