;
Athirady Tamil News

சர்வதேச விசாரணையை நடத்துவது சட்டவிரோதம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு

0

இலங்கையின் அரசமைப்பிலும் வேறு எந்தச் சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளைநடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இது போன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்தாலோசிப்பதற்கு அரசு தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிங்களப் பத்திரிகையொன்றில் பிரசுரமான ‘சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை’ என தலைப்பிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் புனித ஹெரால்ட் அந்தோனி ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 88 தொகுதிகள் மற்றும் 48 ஆயிரத்து 909 பக்கங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் 2023 ஏப்ரல் 20 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், புனித ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரிடம் கையளித்தார்.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் புனித ஹெரால்ட் அந்தோனி ஆண்டகையுடன் நேற்றுமுன்தினம் (05.10.2023) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொலைபேசியில் கலந்துரையாடியபோது, தான் குறித்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளார்.

சர்வதேச விசாரணை
இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையின் அரசமைப்பிலும் வேறு எந்தச் சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இது போன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது.

சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆயர்கள் பேரவை, ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து மேலும் கலந்துரையாட அரசு எதிர்பார்க்கின்றது என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.