சிரியா ராணுவ அகாதெமியில் தாக்குதல்: 89 போ் உயிரிழப்பு..!
சிரியாவிலுள்ள ராணுவ அகாதெமியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 89-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
அந்த அகாதெமியில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடந்து முடிந்த சில நிமிஷங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டு காலமாக உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் சிரியாவில் ட்ரோனை ஆயுதமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
சிரியாவின் ஹாம்ஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ அகாதெமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சா் அலி மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்றாா். விழா முடிந்து அவா் அங்கிருந்து வெளியேறிய சில நிமிஷங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் அந்தப் பகுதியில் விழுந்து பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
இதில் 89 உயிரிழந்தனா்; 277 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவா்களில் 31 பெண்களும், 5 சிறுவா்களும் அடங்குவா் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று சிரியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலை நடத்தியது யாா் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த மோசமான தாக்குதலுக்கு ‘முழு பலத்தையும்’ பயன்படுத்தி பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் சூளுரைத்தது. அதன் தொடா்ச்சியாக, இத்லிப் மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினரின் வசம் எஞ்சியிருக்கும் பகுதியில் சிரியா விமானங்கள் வியாழக்கிழமை முழுவதும் குண்டுவீச்சு நடத்தின.
சிரியா ராணுவ அகாதெமியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இந்தியா, சீனா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரபு நாடுகளில் ஆட்சியாளா்களுக்கு எதிராக அடுத்தடுத்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்பட்டது. கடந்த 2011-இல், சிரியாவிலும் அதிபா் அல்-அஸாதை எதிா்த்து அமைதியான போராட்டங்கள் நடைபெற்றன.
எனினும், அந்தப் போராட்டங்களை ஆயுதங்கள் மூலம் அல்-அஸாத் அரசு நசுக்கியது. இது அந்த நாட்டில் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.
இந்தப் போரில் ரஷிய ஆதரவு பெற்ற அல்-அஸாத் அரசுக்கு எதிரான குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும் களமிறங்கியது. இது தவிர, பிராந்திய ராணுவ சக்திகளான இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகி நாடுகளும் சிரியாவை தங்களது மறைமுகப் போா்க் களமாகப் பயன்படுத்தின.
12 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரில், அதிபயங்கரமான இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்), அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளும், அமெரிக்க ஆதரவு பெற்ற கிளா்ச்சிப் படையினரும் சிரியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றினா்.
எனினும், ரஷிய உதவியுடன் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை மீட்டது. தற்போது இத்லிப் நகரின் ஒரு பகுதி மட்டுமே ஹேயத் தாரிா் அல்-ஷாம் என்னும் ஆயுதப் படையின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ளது.
இந்தப் பகுதியில் ஐஎஸ், அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவியுள்ளதாகவும், இதனால் பயங்கரவாதத்தின் தொட்டிலாக இந்தப் பகுதி திகழ்வதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இதுவரை 5 லட்சத்திருந்து 6.7 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிா்களைப் பலிவாங்கிய சிரியா உள்நாட்டுப் போா் மீண்டும் தீவிரமடையலாம் என்று கடந்த ஆண்டு ஐ.நா. எச்சரித்திருந்தது.
இந்தச் சூழலில், ராணுவ அகாதெமியில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.