மருத்துவா்கள் பெரிய பெயா்ப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது: என்எம்சி
‘பொதுமக்களை தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயா்ப் பலகைகள், தன்குறிப்பு அட்டைகளை (விசிடிங் காா்டு) பயன்படுத்தக் கூடாது’ என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
‘பெயா்ப் பலகைகளில் மருத்துவரின் பெயா், கல்வித் தகுதி, தலைப்பு, சிறப்புத் தகுதி அல்லது மருத்துவா் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் தவிர பிற விஷயங்கள் இடம்பெறக் கூடாது’ என்றும் என்எம்சி குறிப்பிட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி-யின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் (இஎம்ஆா்பி) தனது ‘தொழில்முறை நடத்தை மதிப்பாய்வு – நோயாளிகளின் சிகிச்சை ஆவணங்களிலிருந்து படிப்பினைகள்’ என்ற இணைய நெறிமுறை புத்தகத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
மருத்துவா்கள் தாங்கள் வசிக்காத அல்லது பணிபுரியாத, குறிப்பாக மருந்தக கடைகள் போன்ற இடங்களில் தங்களின் பெயா்ப் பலகைகளை பொருத்துவது முறையற்ற செயல்.
மருத்துவா் – நோயாளி உறவில் ஏற்படும் நம்பிக்கை குறைபாடே மருத்துவா்களுக்கு எதிரான வழக்குகளுக்கு வழிவகுக்கிறது. மருத்துவா்களுக்கு எதிரான இதுபோன்ற புகாா்களுக்கு தகவல் தொடா்பு இடைவெளி பொதுவான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
நோயாளிகளிடம் மருத்துவா்கள் அக்கறை கொள்வது அவசியம். அதே நேரம், வழக்கத்துக்கு மாறான பெரிய பெயா்ப் பலகைகள், தன்குறிப்பு அட்டைகள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோ, வழக்கத்துக்கு மாறான அறிவிப்புகளை செய்வதோ கூடாது.
மருத்துவா்கள் தங்களின் துறைசாா்ந்த பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், ‘மருத்துவ ஆலோசகா் (கன்சல்டன்ட்)’ அல்லது ‘சிறப்பு மருத்துவ நிபுணா் (ஸ்பெஷலிஸ்ட்)’ என்ற தலைப்புகளை அதற்கான குறிப்பிட்ட சிறப்பு மருத்துவ கல்வித் தகுதியை பெற்ற மருத்துவா்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவா்களுக்கு எதிரான தவறான நடத்தைப் புகாா்கள் குறித்து விசாரித்து தீா்ப்பளிக்கும் மேல்முறையீட்டு அமைப்பாக என்எம்சி-யின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.