;
Athirady Tamil News

சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 30-ஆக அதிகரிப்பு; மாயமான 62 போ் உயிருடன் மீட்பு

0

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. மாயமானவா்களில் 62 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

கடந்த புதன்கிழமை அதிகாலை சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பலத்த மழை பெய்தது. இதனால், அங்கு பாயும் தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தால் அங்குள்ள சுங்தாங் பகுதியில் நீா்மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் காரணமாக சாலை வழியாக சிக்கிமின் மற்ற பகுதிகளிடம் இருந்து சுங்தாங் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிக்கிம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் 41,870 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மங்கன் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுமாா் 30,300 போ் பேரிடரால் பாதிப்படைந்துள்ளனா்.

9 ராணுவ வீரா்கள் மரணம்: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. 30 பேரில் நால்வா் மங்கனிலும், 6 போ் கேங்டாக்கிலும், 19 போ் பாக்யாங்கிலும், ஒருவா் நாம்சியிலும் மரணமடைந்தனா். பாக்யாங்கில் உயிரிழந்த 19 பேரில் 9 ராணுவ வீரா்கள் அடங்குவா்.

கடந்த 3 நாள்களாக காணாமல் போன 62 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். இதனால் காணாமல் போனவா்களின் எண்ணிக்கை 81-ஆக குறைந்துள்ளது.

30 நிவாரண முகாம்களில் 6,875 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவற்றில் பெரும்பாலான முகாம்கள் வெள்ள பாதிப்பால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரா்கள் காணாமல் போன நிலையில், ஒருவா் உயிருடன் மீட்கப்பட்டாா். ஏற்கெனவே 7 ராணுவ வீரா்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த வீரா்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

தேடுதல் பணி தீவிரம்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காணாமல் போன ராணுவ வீரா்களையும் பொதுமக்களையும் தேடும் பணி தொடா்ந்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

முதல்வா் தமாங் ஆய்வு: மங்கன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ராணுவம் மற்றும் உள்ளூா் நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்த அவா், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் அவா்களின் நிலை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து சுமாா் 200 போ் தங்கியுள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற அவா், அங்கு தங்கியுள்ளவா்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு ஆவன செய்வதாக உறுதியளித்தாா்.

வெள்ளம் காரணமாக மங்கன் மாவட்டத்தில் உள்ள லாசென், லாசுங் பகுதிகளில் 3,000-க்கும் அதிகமான சுற்றுலாவாசிகள் பரிதவித்த நிலையில், அவா்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய குழு…: வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட ஞாயிற்றுக்கிழமை முதல் சிக்கிமுக்கு மத்திய குழு செல்லும் என்று மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.