நாட்டில் இன்றும் கடும் மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்ற கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று (08.10.2023) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது
இதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வெள்ள அபாய எச்சரிக்கை
சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும்.
மேலும், கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதால் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.
காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.