இஸ்ரேலை திணறடிக்கும் ஹமாஸ் படையினர்… இவர்களின் பின்னணி என்ன?
பாலஸ்தீனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் 1980களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால், அவர் பாலஸ்தீனியர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத் தர முடியாது என்ற அதிருப்தியில் 1987 பிற்பாதியில் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய இரண்டாவது அரசியல் இயக்கமாக ஹமாஸ் இயங்கி வந்தாலும், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டனை பொறுத்தவரை, அது பயங்கரவாத இயக்கமாக தான் கருதப்படுகிறது.
ஆயுதம் தாங்கி போராடி வந்தாலும், ஹமாஸ் அமைப்பின் பிரதான நோக்கமே இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதும், சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதும்தான். இஸ்லாமியர்கள் இஸ்ரேலில் ஒடுக்கப்படுவதால், தங்கள் எதிர்ப்பை 90களின் முதல் பாதியில் ஹமாஸ் அமைப்பு பதிவு செய்தது. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் சில ஆயுதம் ஏந்திய போராளி குழுக்களுடன் ஹமாஸ் அமைப்பு கை கோர்த்தது. முழுக்க முழுக்க பாலஸ்தீன விடுதலையை மட்டுமே முன்வைத்து போராடி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு கத்தார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆதரவாளர்கள் அதிகம்.
1990களில் கையெழுத்தான ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை மீறி, யஹ்யா அய்யாஸ் என்ற ஹமாஸ் ராணுவ வெடிகுண்டு நிபுணர் 1995ஆம் ஆண்டு இஸ்ரேலால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் வகையில் 1995ஆம் ஆண்டு இஸ்ரேலில் பேருந்து குண்டுவெடிப்புகள், தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள், தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தியதால் உலகளவில் அறியப்பட்டது ஹமாஸ் குழு…
காசாவில் 2005இல் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப்பெற்ற பிறகு, அந்த பகுதியில் ஹமாஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தியது. காசாவில் பிரதானமாக இயங்கி வரும் ஹமாஸ், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை அமைத்தாலும், பாலஸ்தீனத்தில் ஒரு பிரிவினர் ஆதரவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் மறைவுக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்புக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவை இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்த்து வரும் ஹமாஸ் குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலின் மீது அதிருப்தியில் உள்ளனர். 2014ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்புக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற உச்சகட்ட சண்டையில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சிறு சிறு மோதல்கள் நடந்து வந்திருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் இவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. 2021ஆம் ஆண்டு ஹமாஸ்-இஸ்ரேல் ராணுவம் இடையே கடுமையான சண்டை 11 நாட்கள் நடந்திருக்கிறது.