;
Athirady Tamil News

நெடுங்கேணியில் மூடப்பட்ட அம்மாச்சி உணவகம்

0

பல்சுவை பாரம்பரிய உணவுகளை சுவைபட தயாரித்து தந்த, நெடுங்கேணி நகரில் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டு பல நாட்கள் கடந்து விட்டன.

வவுனியா வடக்கின் நிர்வாக செயற்பாட்டு நகரமாக நெடுங்கேணி நகரம் அமைந்துள்ளது.

கோவிட் – 19 இன் தாக்கத்தின் போது ஏற்பட்ட ஊரடங்கு நாட்களால் தொடர்ந்தும் தன் செயற்பாட்டை இழந்த இந்த அம்மாச்சி உணவகம் இப்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முடிந்ததால் அதிகளவானோர் இந்த அம்மாச்சி உணவகத்தினால் பயனடைந்தனர்.

நெடுங்கேணி அம்மாச்சியால் பயனடைந்தோர்
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகங்களில் பணியாற்றுவோர் அதிகளவில் இந்த உணவகத்தினால் பயனடைந்ததோடு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தூர இடங்களில் இருந்து வருகை தரும் மக்களும் அதிகளவில் பயனடைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுச் சாப்பாடு போல விரும்பிய உணவை பெற்று உண்ண முடிந்தது.இருந்தும் இப்போது அப்படி பெற முடிவதில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பலர் கருத்திட்டிருந்தனர்.

பல்சுவை பாரம்பரிய உணவுகளை தயாரித்து வழங்கக்கூடிய பல பெண்களின் வாழ்வாதாரமாக இந்த அம்மாச்சி உணவகம் இருந்தது. சோறு, புட்டு, வடை, தோசை, அப்பம், இடியப்பம், இன்னும் பல உணவுகளோடு எலுமிச்சை,தோடை போன்ற பலவகை குளிர்பானங்களும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அம்மாச்சி உணவகத்தில் உணவுகளை தயாரித்து வழங்கிய முயற்சியாளர்கள் பற்றிய தகவல்களை பெற்று அவர்களுடனான கருத்தாடல்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான சூழல் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆய்வு முயற்சிகளுக்கு ஆதரவில்லாத இயல்பு
பிரதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான தெளிவான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான பொருத்தப்பாடான எத்தகைய ஒழுங்குபடுத்தல்களையும் இந்த பிரதேசங்கள் கொண்டிருப்பதில்லை என்பதும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கான உதவிகரமான தகவல் களஞ்சியங்களை பேணவில்லை என்பதும் கவலைக்குரிய விடயங்களாகும்.

கிராமங்களில் பொது நூலகங்களில் பிராந்திய செயற்பாட்டுத் தொகுப்புக்களை காணமுடியவில்லை. அத்தோடு முழுமையான விடய அறிவுகளை தெரிந்தவர்களை மிகக் குறைவாகவே கொண்டுள்ளமையானது தங்கள் வாழிடங்கள் பற்றிய தேடலையும் தெளிவான அறிவை பெற்றுக்கொள்ளலையும் இளையவரிடையே ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற உணர்வை இவை உணர்த்தின.

ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த மற்றும் வாழும் ஊர்களைப்பற்றிய தெளிவான அறிவுடையவராகவும் பிராந்திய மொழியறிவுடையவராகவும் பல கலாச்சார சமூகங்கள் இருப்பின் அவர்களது கலாச்சார பண்பாடுகளையும் அறிந்து மதித்து வாழ்பவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மரக்கறி, பழங்கள், பால் சேகரிப்பு மையமாக மாறிப்போனது
அம்மாச்சி உணவகமாக தோற்றம் பெற்றிருந்த இடம் இப்போது மரக்கறி, பழங்கள், பால் சேகரிப்பு மையமாக மாறிப்போயுள்ளதை அவதானிக்க முடிந்தது.

நெடுங்கேணியும் அதனைச் சூழவுள்ள ஊர்களும் அதிகளவில் விவசாயம் சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுவதும் அதன் விளைவுகளை சந்தைப்படுத்துதலும் சார்ந்ததாக இந்த இடம் சேகரிப்பு மையமாக இப்போது மாற்றப்பட்டுள்ளது.

செயற்பாடற்றுக் கிடந்த அம்மாச்சி உணவகக் கட்டிடத்தினை சேகரிப்பு மையமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியானது பாராட்டுக்குரியதே! அம்மாச்சி உணவகத்தின் செயற்பாடுகள் நீண்ட நாட்களாக மீளவும் ஆரம்பிக்கப்படாது இருந்ததாகவும் அதன் பின்னரே சேகரிப்பு மையமாக மாறிப்போனது எனவும் நகரவாசிகள் பலரிடையே உரையாடியதன் மூலம் அறிய முடிந்தது. அம்மாச்சி உணவகத்தின் தேவை குறைந்து செல்கிறதா என்ற கேள்வியும் இங்கே தோன்றாமலில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.