;
Athirady Tamil News

சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரகலயவே பொறுப்பு கூற வேண்டும் : சாகர காரியவசம்

0

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கியதால் பொருளாதார பாதிப்பு தீவிமடைந்தது.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

இவ்வாறு , பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(09) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல்
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நாடு தற்போது சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதற்கு ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இடம்பெற்ற அரகலயவே பொறுப்புக் கூற வேண்டும்.

போராட்டத்தின் காரணமாகவே நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆசனத்தில் இருந்தவர் அதிபரானார்.

பூகோள பாதிப்புக்கு மத்தியில் யார் மக்களை பாதுகாத்தார்கள்,நெருக்கடியான சூழ்நிலையை யார் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் முன்மாதிரியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரியுள்ளோம்.

அதிபர் வேட்பாளர்
வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இது அவரது தனிப்பட்ட தீர்மானமே தவிர கட்சியின் தீர்மானமல்ல, அதிபர் வேட்பாளர் தொடர்பில் பரந்துப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.