பாஜகவுடன் கூட்டணி; விஜய்யுடன் அண்ணாமலை பேச்சுவார்த்தை – விஜய் மக்கள் இயக்கம் விளக்கம்!
பாஜவுடனான கூட்டணிக்காக நடிகர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற செய்திக்கு விஜய் மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்தது. அதிமுக தலைவர்களை ஒரே கூட்டணியில் இருந்த பாஜகவினரே தொடர்ந்து விமர்சித்து வந்ததால் பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
நாடாளுமனற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டணி முறிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தமிழக பாஜக அதிக வாக்குகளை பெற, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
அந்தவகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த அண்ணாமலை பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதில் நடிகர் விஜய்யின், மக்கள் இயக்கத்திடமும் ஆதரவு கேட்டுள்ளார் என்றும் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
பொய்யான செய்தி
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இன்றைய அக்டோபர் 9 பிரபல நாளிதழில் தளபதி விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.
தளபதி அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு பிரபல நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.