நிதி உதவி தொடர்பில் இந்தியா வழங்கிய உறுதி
இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த விரிவான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.
மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள்
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்த நிலையில் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, தற்போது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அத்துடன் இந்த முயற்சிக்கான உடன்படிக்கையும், கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை நவீனமயமாக்கல், மன்னார் மற்றும் அனுராதபுரத்தில் வீடமைப்பு முயற்சிகள், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் மேம்பாடு, பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையை நிர்மாணித்தல் என்பன இந்த திட்டங்களில் அடங்கும்.
அபிவிருத்தி திட்டங்கள்
யாழ்ப்பாண பிரதேசத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், தம்புள்ளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பழங்களை பாதுகாப்பதற்காக 5000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட பசுமை இல்ல வசதிகளை நிர்மாணித்தல்.
மேலும், இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான புதிய சத்திரசிகிச்சை பிரிவு உடனடியாக நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பால்வள அபிவிருத்திச் சபை, அமுல் என்ற இந்திய குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் சம்மேளனம் மற்றும் இலங்கையின் கார்கில்ஸ் குழுமம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் இலங்கையின் உள்ளூர் பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
முதல் ஐந்து வருடங்களுக்குள் பால் உற்பத்தியை 53% அதிகரிப்பதும், 15 வருடங்களுக்குள் இலங்கைக்கான பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதும் இந்த புதிய திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 200,000 உள்ளூர் விவசாயிகள் உயர்தர மருந்துகள், கால்நடை ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற வசதிகளை பெறுவார்கள் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.