காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி: மௌனம் காக்கும் இஸ்ரேல் தரப்பு
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம் படையணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – காசா எல்லை வேலிக்கு அருகில் உள்ள ஒரு திறந்த வெளியில் இந்த மூவரையும் ஆயுதம் தரித்த இரு போராளிகள் விட்டுவிட்டுச் செல்வதை காணொளி காட்டுகிறது.
Footage broadcasted by Al Jazeera shows the moment an Israeli woman and children are released by Hamas. The woman and children are believed to have been captured by Al- Qassam Brigades during its attack on Israel pic.twitter.com/uSXSR0I7ev
— Middle East Eye (@MiddleEastEye) October 11, 2023
முன்னோடியில்லாத தாக்குதல்
எனினும் இது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இக்காட்சிகள் இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சர்வதேச தொலைக்காட்சி ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகங்கள் இந்த விடுவிப்பு முன்பே நடந்ததாகக் கூறுகின்றன.
மேலும், சிலர் இந்த விடுவிப்பு கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாகவும், ஹமாஸ் அமைப்பானது தனது சர்வதேச மரியாதையை உயர்த்த முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் மீதான முன்னோடியில்லாத தாக்குதலின் போது சனிக்கிழமையன்று 150 கைதிகள் ஹமாஸால் கைதுசெய்யப்பட்டனர்.
காசா மீது போர் அறிவிப்பு
இச்செயலால் காசா மீது போரை இஸ்ரேல் அறிவிக்க வழிவகுத்தது. இந்நிலையில், ஐந்து நாட்களில் இடைவிடாத குண்டுவெடிப்பானது காசாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட 1,050 க்கும் மேற்பட்டவர்களைக் பலியாக்கியது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், 5,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் முழு முற்றுகையின் கீழ் உள்ள பாலஸ்தீனிய பகுதியில் 250,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு “மனிதாபிமான பேரழிவு” என்று சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துக்களில் வெளிப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் சனிக்கிழமை முதல் 155 படை வீரர்கள் உட்பட 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.