;
Athirady Tamil News

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி!

0

இலங்கைவாழ் மக்களின் வாழ்கையை மேம்படுத்த உதவும் வகையில் இலங்கையில் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதிபர் செயலகத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கூடுதல் நிதி வழங்கப்பட உள்ள திட்டங்களுக்கு தற்போது இந்திய அரசு ஆதரவு அளித்து வரும் நிலையில், இதற்கான ஒப்பந்தமும் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
வடமாகாணத்தில் 27 பாடசாலைகளினை நவீனமயமாக்கல், மன்னார் மற்றும் அனுராதபுரத்தில் வீடமைப்பு முயற்சிகள், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் மேம்பாடு, பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையை நிர்மாணித்தல், ஆகியவை இந்த திட்டங்களில் அடங்குகின்றது.

இவை தவிர, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், தம்புள்ளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பழங்களைப் பாதுகாப்பதற்காக 5000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட பசுமை இல்ல வசதிகளை நிர்மாணித்தல் ஆகியவையும் இந்த திட்டங்களில் அடங்குகின்றன.

மேலும், இவற்றுடன் சேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான புதிய சத்திரசிகிச்சை பிரிவுகளும் உடனடியாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்திய தேசிய பால்வள அபிவிருத்திச் சபை, அமுல் என்ற இந்திய குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் சம்மேளனம் மற்றும் இலங்கையின் கார்கில்ஸ் குழுமம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் இலங்கையின் உள்ளூர் பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

நவீன மயமாக்கல்
முதல் ஐந்து வருடங்களுக்குள் பால் உற்பத்தியை 53% அதிகரிப்பதும், 15 வருடங்களுக்குள் இலங்கைக்கான பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதும் இந்த புதிய திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 200,000 உள்ளூர் விவசாயிகள் உயர்தர மருந்துகள், கால்நடை ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற வசதிகளை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முன்முயற்சியின் மூலம் கால்நடைத் துறை நவீன மயமாக்கல், பால் தொடர்பான துணைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் மற்றும் மலிவு விலையில் பால் தொடர்பான பொருட்களை அணுகுவதை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், இரு நாட்டு அதிகாரிகளும் இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.