;
Athirady Tamil News

வெகுவிரைவில் விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திப்பது நல்லது! எம்.ஏ.சுமந்திரன்

0

வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிய கடிதங்கள் எதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்றடையவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்தியப் பிரதமரை நாங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தங்கள் கருத்து என்ன?’ – என்று அந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்குச் சுமந்திரன் எம்.பி. பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அந்தக் கடிதங்கள் இந்தியப் பிரதமரிடம் சென்றடைந்துள்ளன. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் வைத்தியர் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எங்களைச் சந்தித்தபோது இந்த விடயங்கள் (கடிதங்கள்) பிரதம மந்திரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெளிவாகவே சொல்லியிருந்தார்.

அதற்கு முன்னர் கடிதங்களை எடுத்துச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர், அந்தக் கடிதங்களை இந்தியப் பிரதமரிடம் கையளித்தவுடனேயே புதுடில்லியிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து கடிதங்களைப் பிரதமரிடம் கையளித்துவிட்டேன் என்று அறிவித்திருந்தார். எனவே, எல்லாக் கடிதங்களுடம் இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே ஆகியோர் அதனை எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே, அவர்கள் அது தொடர்பில் எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை; பொய் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை. விக்னேஸ்வரனுக்கு மறதி வியாதி ஏற்பட்டிருக்கலாம். அது வேறு பிரச்சினை.

இந்தியப் பிரதமரைச் சந்திப்பது தொடர்பில் விக்னேஸ்வரன் மின்னஞ்சலில் (இப்போது) அனுப்பிய கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் கட்சித் தலைவர் இல்லைதானே. கட்சித் தலைவர்களுக்குத்தான் அவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடுவார். ஆனால், விக்னேஸ்வரனின் கடிதத்தை அவர் முக்கியமான விடயமாகக் கருதவில்லையோ தெரியவில்லை, அந்தக் கடிதம் தொடர்பில் என்னுடன் சம்பந்தன் எதுவும் பேசவில்லை.

இந்தியாவின் முக்கிய வகிபாகத்தை நன்றாக அறிந்த தலைவர்தான் சம்பந்தன். அதற்கேற்ற மாதிரி அவரின் செயற்பாடுகள் இருக்கும்.” – என்றார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்தும் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி கேட்ட போது,

“சட்டமா அதிபருக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் சம்பந்தமாகவே விக்னேஸ்வரன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அந்த உரையாடல் தொடர்பில் எவரும் எந்தக் கருத்துக்களையும் சொல்ல முடியாது. ஆகவே, விக்னேஸ்வரன் கற்பனையில் சொல்லுகின்ற விடயங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது.” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.