;
Athirady Tamil News

டக்ளஸ் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் பதவி விலகலே சிறந்தது

0

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை பதவி விலகல் செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனை
“பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வறு பார்க்கின்றீர்கள்?

டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் நாடாளுமன்றத்திலே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தாவை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்னிந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று. அந்த அமைச்சிற்கு பொருத்தமில்லாத ஒருவர்.

அவர் மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை பதவி விலகல் செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுப் பொறுப்பை, எமது மாவட்டத்திலேயும் ஒரு திணைக்களம் கூட சுற்றுநிரூபம் வெளியிடப்படாத அமைச்சை வைத்திருக்கும் அமைச்சர்களைப் போல அவரும் ஏதாவது தன்னுடைய சலுகைகளை எடுக்கக் கூடிய வகையிலான அமைச்சைக் கேட்டெடுத்து பேசாமல் இருப்பதே பொருத்தம்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.