இலங்கையின் மருத்துவத்துறைக்கு பங்களித்த பிரித்தானியா
கண் சத்திரசிகிச்சைக்கான வில்லைகளுக்கு இப்போது தட்டுப்பாடு இல்லை என தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தக படவல தெரிவித்துள்ளார்.
கண் வில்லை தட்டுப்பாட்டால் இதுவரை கண் வில்லை சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படவில்லை எனவும் வலியுறுத்திய அவர் தற்போது, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5000 கண் வில்லைகள் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (12) உலக பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண் விபத்துகளை குறைப்பது
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிகையில்,
“பணியிடத்தில் ஏற்படும் கண் விபத்துகளை குறைப்பது என்பதை தொனிப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆண்டுக்கான தேசிய பார்வை தினத்தில் நமது நாட்டுக்கு நன்கொடையாக கண்வில்லைகள் கிடைத்திருக்கும் மகிழ்வான செய்தியை பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், சராசரியாக மாதமொன்றுக்கு சுமார் 900 கண் வில்லை சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் பிரித்தானியாவிடம் இருந்து கிடைத்த வில்லைகள் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமல்லாமல், பிரித்தானியாவிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட கண் வில்லைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் நன்கொடையாக பெறப்பட்ட இந்த கண் வில்லைகள் சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கண்வில்லை தட்டுப்பாட்டினால் சத்திரசிகிச்சை இனி தடைபடாது எனவும் அவர் தெரிவித்த்தார் .