வட்டி வீத குறைப்பினால் வங்கி வைப்புக்களுக்கு என்ன நடக்கும்?
வங்கிகளில் செய்யப்படுகின்ற நிதி வைப்புக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கடன்களுக்கு மத்திய வங்கயினால் நிர்ணயிக்கப்படுகின்ற வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பணவீக்க வீழ்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை விரிவடைய செய்யும் நோக்கம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவித்தலின் ஊடாக உற்பத்தி என்பனவற்றை நோக்கமாகக்கொண்டு இவ்வாறு வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை மத்திய வங்கியின் நாணய சபை எடுத்துள்ளது.
எப்படி குறைக்கப்பட்டுள்ளது?
அதற்கமைய வைப்புக்களுக்கான வட்டி வீதம் மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதம் என்பன முறையே 10 மற்றும் 11 சதவீதமாகவும், நியதி ஒதுக்கு விகிதம் 2 வீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நியதி ஒதுக்கு வீதம் என்பது மக்கள் வங்கிகளில் வைப்பு செய்கின்ற பணத்தில் ஒரு பகுதியை வங்கிகள் மத்திய வங்கியில் வைப்பு செய்யவேண்டும். அது இரண்டு வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் வங்கிகளில் செய்கின்ற வைப்புக்களில் 2 வீதம் வங்கிகளினால் மத்திய வங்கியின் வைப்பு செய்யப்படும்.
இதேவேளை, நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தில் பேணுவதையும், பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக்கொண்டு இவ்வாறு வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன.
‘’கொள்கை வட்டி வீதங்களின் இக்குறைப்பு எதிர்வருகின்ற காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினை துரிதப்படுத்துமென சபை எதிர்பார்க்கின்றது. நாணய நிலைமைகளின் தொடர்ச்சியான தளர்த்தலின் நன்மைகளைத் தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களிற்கும் போதுமானளவிலும் விரைவாகவும் ஊடுகடத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சிக்கு ஆதரவளிக்குமாறு நிதியியல் துறை வலியுறுத்தப்படுகின்றது ‘’ என்று மத்திய வங்கி வட்டி வீத குறைப்பு குறித்து அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் கோரிக்கை
இந்நிலையில், வட்டி வீத அதிகரிப்பின் ஊடாக என்ன நடக்கும்? எந்தெந்த துறைகளில் தாக்கம் ஏற்படும்? என்பது தொடர்பாக விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. வட்டி வீதம் என்பது வங்கிகளில் மக்களுக்கு வழங்குகின்ற கடன்களுக்கான வட்டி மற்றும் மக்கள் செய்கின்ற வைப்புகளுக்கான வட்டி என்பவற்றை குறிக்கின்றது. அதனடிப்படையில் இவ்வாறு வட்டி வீதங்களை குறைப்பதன் ஊடாக மக்களுக்கு வழங்குகின்ற கடன்களின் வட்டியை முடியுமான அளவு குறைக்குமாறு மத்திய வங்கி அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
அதாவது மக்கள் பெறுகின்ற கடன்களுக்கான வட்டிகள் குறைய வேண்டும் என்பதை மத்திய வங்கி திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. கடந்த காலங்களில் வட்டி வீதம் அதிகரித்தபோது மக்கள் பெறுகின்ற கடன்களுக்கான வட்டி பாரியளவு அதிகரித்தது. கிட்டத்தட்ட 25 மற்றும் 30 வீததமளவில் கடன்களுக்காக வட்டி பெறப்பட்டது. அதனை தற்போதைய இந்த புதிய வட்டி நிர்ணயத்திற்கு அமைய குறைக்குமாறு மத்திய வங்கி கோரிக்கை விடுத்திருக்கிறது.
எப்போது அதிகரித்தது?
பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையை அடுத்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு என்று கூறியே வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, வைப்புக்களுக்கான வட்டி வீதம் 15.5 ஆகவும் கடன்களுக்கான வட்டி வீதம் 16.5 ஆகவும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நீடித்தது. பின்னர் படிப்படியாக வட்டி வீதம் இவ்வருடத்திலிருந்து குறைக்கப்பட்டது.
வட்டி வீத அதிகரிப்பினால் வங்கிக் கடனுக்கான வட்டிவீதங்கள் 25 வீதத்தை தாண்டின. மேலும், நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களும் அதிகரித்தன. பணவீக்கத்தை குறைப்பதற்காகவே இவ்வாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. காரணம் பணவீக்கமானது 70 வீதத்தை தாண்டி கடந்த வருடம் பதிவாகியது. எனவே, பணம் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் இவ்வாறு வட்டி விகிதங்களாக குறைக்கப்பட்டன. வட்டி வீதத்தை அதிகரிக்கும்போது எவ்வாறு பணவீக்கம் குறைவடையும் என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.
வட்டி வீதத்தை அதிகரித்தால் பணவீக்கம் எப்படி குறையும்?
வட்டி வீதங்களை அதிகரிக்கும்போது மக்கள் தம்மிடம் இருக்கும் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்வார்கள். காரணம் வைப்புக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும். மேலும், புதிய கடன்களை வங்கிகளில் பெற ஆர்வம் காட்டமாட்டார்கள். காரணம் கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக இருக்கும். இதனால் மக்களிடம் கொள்வனவு நாட்டம் குறையும். தொடர்ந்து பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி குறைவடையும். அதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்காது. எனவே பணவீக்கம் வீழ்ச்சியடையும். இது சர்வதேச ரீதியான கோட்பாடாகும். அந்த கோட்பாடு கைகொடுத்தது என்றே கூறவேண்டும். வட்டி வீத அதிகரிப்பையடுத்து 2022 நடுப்பகுதியில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2023 ஆகஸ்டில் 2 வீதமாக விகிதமளவில் குறைவடைந்தது.
பொருளாதாரம் எப்படி பாதித்தது?
மறுபுறம் வட்டி அதிகரிப்பினால் நாட்டின் பொருளாதாரம் சுருக்கம் அடைந்தது. வர்த்தகங்கள் சுருக்கமடைந்தன. வர்த்தகங்கள் விரிவடையும் தன்மை குறைவடைந்தன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் பாதிக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதாவது சிறிய வர்த்தகர்களினால் புதிய கடன்களை பெற்று வர்த்தக நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. காரணம் வங்கி கடன்களுக்கான வட்டி அதிகமாக இருந்தது. அதன் காரணமாக சிறிய நகர மற்றும் வர்த்தக முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இதனால் வேலையின்மை அதிகரித்தது. மக்களின் வருமானம் குறைவடைந்தது. பொருட்களின் உற்பத்தி குறைவடைந்தன. இது பொருளாதார வளர்ச்சியை சுருக்கச் செய்தது.
‘’2023 ஆம் ஆண்டில் நாட்டின் உற்பத்தி குறைவடைந்து இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 என்ற மறை பெறுமானத்தில் பதிவாகும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதற்கு இந்த வட்டி மீது அதிகரிப்பு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது.
வட்டி வீத குறைப்பால் என்ன நடக்கும்?
தற்போது வட்டி வீதங்கள் குறைவடைந்திருக்கின்றதன் காரணமாக உற்பத்திகள் அதிகரித்து சிறிய மற்றும் நடுத்தரவர்த்தக முயற்சிகள் மேலும் விரிவடையும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் ஊடாக 2024 ஆம் ஆண்டில் 1.7 வீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
வட்டி வீதம் குறையும் போது மக்கள் வங்கிகளில் இருக்கின்ற பணத்தை மீளப்பெறுவார்கள். காரணம் வட்டி குறைவு என்பதால் பணத்தை வங்கியில் வைப்பு செய்யாமல் வேறு ஏதாவது தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு மக்கள் முயற்சிப்பார்கள். அதேபோன்று புதிய கடன்களை மக்கள் வங்கிகளில் பெறுவார்கள். காரணம் வங்கி கடன்களுக்கான வட்டி வீதம் குறைவாக இருக்கும். இந்த சூழலில் வங்கிகளில் இருக்கின்ற பணம் மக்களின் கைகளை நோக்கி நகரும். வட்டி குறையும்போது நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் புதிய கடன்களை பெற்று தமது தொழிலை விரிவு படுத்துவார்கள். அதனால் தொழில் வாய்ப்புக்கள், மக்களின் வருமானம் அதிகரிக்கும். அதாவது வட்டி வீதம் குறையும்போது பொருளாதாரம் விரிவடையும். இது பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது.
சுருக்கமடைந்த பொருளாதாரம் மீண்டும் விரிவடையுமா?
தற்போது வட்டி வீதங்களை குறைத்து மத்திய வங்கியும் அதனையே எதிர்பார்க்கின்றது. அதாவது பொருளாதார செயல்பாடுகள் விரிவடைய வேண்டும். கடந்த காலங்களில் வட்டி வீத அதிகரிப்பினால் சுருக்கமடைந்த பொருளாதாரம் மீண்டும் விரிவடைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதன் காரணமாகவே மக்களுக்கு வழங்குகின்ற கடன்களுக்கான வட்டியை முடியுமானவரை குறைக்குமாறு அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பிடம் மத்திய வங்கி திட்டவட்டமாக கோரிக்கை விடுத்திருக்கிறது.
குறைப்பினால் என்ன தாக்கம் ஏற்படும்?
வட்டி வீத குறைப்பின்போது ஏற்படும் மற்றுமொரு தாக்கம் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். வட்டி வீதங்களை குறைக்கும்போது மக்கள் அதிகளவு கடன்களை பெறுவார்கள். கடன்களை பெறுவதன் ஊடாக மக்கள் பொருள் கொள்வனவில் அதிகம் நாட்டம் காட்டுவார்கள். இதனால் கேள்வி அதிகரித்து மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
ஆனால் மத்திய வங்கியானது பணம் வீக்கத்தை ஐந்து வீதமளவிலேயே பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. அதேநேரம் மக்கள் இறக்குமதியில் அதிகம் நாட்டம் காட்டுவர். வட்டிவீதம் குறைவடைவதால் மக்கள் கடன்களை பெற்று பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும்போது டொலர் வெளிச்செல்லும் நிலைமை அதிகரிக்கும். அதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்தின் விரிவுக்கும் இந்த நிலைமை அவசியமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்றுமதி இறக்குமதிக்கான வர்த்தகம் பாரியளவில் அதிகரிக்கவில்லை. காரணம் கடந்த மூன்று வருடங்களாக வாகன இறக்கமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செலவு குறைந்தது. ஆனால் ஏற்றுமதி வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பையும் காண முடியவில்லை. ஆனால் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டு மக்கள் அதிகளவு கடன்களை பெற்று இறக்குமதிகளை செய்யும் பட்சத்தில் இறக்குமதி ஏற்றுமதி என்பனவற்றுக்கு இடையிலான இடைவெளியான வர்த்தக மீது பாதகமான முறையில் அதிகரிக்கும் சாத்தியம் இருக்கின்றது.
எப்படியிருப்பினும் நாட்டை பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் வட்டி வீத குறைப்பு மிக அவசியமாக இருக்கின்றது. அதனுடன் பொருளாதாரம் விரிவடைந்து வளர்ச்சியடைந்து வேலை வாய்ப்புகள் அதிகரித்து வறுமை குறைவடையும். மக்களின் வருமானம் அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்கும். இதுவே நாட்டின் பொருளாதாரத்துக்கு தற்போதைய சூழலில் அவசியமாக இருக்கின்றது.