மகிந்தவை கடுமையாக சாடிய அசாத் சாலி
வருமானமே அற்ற ராஜபக்ச குடும்பம் எப்படி இவ்வளவு சொகுசாக வாழ்கின்றது. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச என்று சொன்னாலே நாட்டுக்கு தரித்திரம். அவர்களது பெயரைக் கூட சொல்லக் கூடாது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச மரணிப்பதற்கு முன்னர் அவரது பெயரை அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும். அவரது அநியாயங்கள் தான் கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் போனதற்கு காரணம் எனவும் அசாத் சாலி சாடியுள்ளார்.
அநியாயங்கள்
இது தொடர்பாக மேலும் கூறிய அவர், “2005இல் இருந்து மகிந்த ராஜபக்ச செய்த அநியாயங்கள் எவ்வளவு. 2005இல் இருந்து மகிந்த ராஜபக்ச செய்த அநியாயங்கள் தான் கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் போனதற்கு காரணம்.
கப்பல் வராத ஒரு துறைமுகம், விமானம் வராத ஒரு விமான நிலையம், போட்டிகள் இடம்பெறாத ஒரு விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் கடன் பெற்று அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் நடைபெறாத ஒன்றுதான் எங்களுடைய அதிவேக நெடுஞ்சாலைகள். எந்தவொரு நாட்டிலும் ஒரு நெடுஞ்சாலைக்கு செலவு செய்யப்படாத தொகைதான் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் செலவு செய்யப்பட்டது.
பிரேரணை
இவை அனைத்திற்கும் யார் ஒரு தீர்வு கொண்டு வருவது. மகிந்த ராஜபக்ச மரணிப்பதற்கு முன்னர் ஒரு விசாரணைக்குழு கொண்டு வரவேண்டும். மகிந்த மரணிக்க முன்னர் ஒரு குழுவை அமைத்து இந்த மைதானம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றில் இருந்து மகிந்தவின் பெயரை நீக்க வேண்டும்.
ஆனால் இவற்றை யாரும் செய்ய மாட்டார்கள். மகிந்தவிற்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த நான்கு மாத காலமாக 56 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதனை ஏன் நான்கு மாத காலமாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
வழக்குத் தாக்கல்
உடனே இந்த பணத்திற்குரியவர்கள் நாட்டுக்கு அதனை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவர்களின் பெயர்களை நான் கூற வேண்டி வரும் என நான்கு மாத காலமாக விஜயதாச கூறிக்கொண்டிருக்கின்றார்.
ஏன் நான்கு மாத காலமாக இதனை இழுக்க வேண்டும். வழக்கு ஒன்று தாக்கல் செய்து யார் யார் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கின்றார்களோ அவர்களது பெயர்களைக் கூறி நாட்டுக்கு அந்தப் பணத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே.
அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற 56 பில்லியன்களை கொணர்ந்து நாட்டின் கடன் தொகையான 52 பில்லியன் டொலர்களை கட்டி விட்டால் நாடு உடனே தலைத்தூக்கி விடும்” என்றார்.