இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் அழகானது! பிரித்தானியாவில் மாணவி அதிரடி கைது
பிரித்தானியாவில் இஸ்ரேல் மீதான தாக்குதலை அழகானது மற்றும் ஊக்கமளிக்கிறது எனக் கூறிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது உரையின்போது கூறிய விடயம் சர்ச்சையானது.
சசெக்ஸ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரியான Hanin Barghouti, தன்னை ஒரு பாலஸ்தீனியர் என்று கூறிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது உரையில், ‘நேற்று ஒரு வெற்றி. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற இனப்படுகொலையின் கீழ் 15 வருட முற்றுகையில் இருந்து விடுதலைப் போராளிகள் வெற்றிகரமாக வெளியேறியது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உற்சாகமாகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் போராடுவோம், எப்பொழுதும் எதிர்ப்போம் என்பதை இது உலகுக்கு காட்டுகிறது. இந்த எதிர்ப்பு செயல்களை நாம் கொண்டாட வேண்டும், ஏனெனில் இது வெற்றி. பாலஸ்தீனியர்களால் தொடங்கப்பட்ட புரட்சிகர வன்முறை பயங்கரவாதம் அல்ல – அது தற்காப்பு’ என தெரிவித்தார்.
இதனால் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தடைசெய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளது. அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.