யாழ். போதனா வைத்தியசாலையில் தாக்குதல் நடத்திய இருவரும் பணிநீக்கம்..!!!
யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் , வைத்தியசாலைக்கு கடமைக்கு அனுப்ப வேண்டாம் என பாதுகாப்பு நிறுவனத்திடம் தான் அறிவித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.
அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு அறிவித்துள்ளேன்.
பொதுமக்கள் வைத்தியசாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக்கூடாது என மேலும் தெரிவித்தார்.