நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைமை..! பறிபோகுமா சஜித் பதவி
நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில்
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக அறியமுடிகிறது.
இங்கு பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த நேரத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பெரும்பான்மை
எனினும், பொதுஜன பெரமுன இந்த வேளையில் எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இவ்வாறானதொரு தீர்மானத்தை தற்போது எடுப்பது பொருத்தமானதல்ல என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதால் அதனை மிக இலகுவாக செய்து முடிக்க முடியும் எனவே இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
மகிந்த,பசிலுக்கு அறிவிக்க வேண்டும்
இந்த தீர்மானம் தொடர்பில் மேலும் பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும், இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவுக்கும் அறிவிக்கப்பட வேண்டுமெனவும் இந்த எம்.பி.க்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காததற்கு வருந்துவதாக அண்மையில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் மாவட்ட தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இக்கலந்துரையாடலில் இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பில் மேலும் பரிசீலித்து தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திற்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.