நாட்டின் பல பாகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை : 248 குடும்பங்கள் வெளியேற்றம்
நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை – ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (14) மாலை 4 மணி முதல் விடுக்கப்பட்ட இந்த மண்சரிவு சிவப்பு அறிவித்தல் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், காலி, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு
மேலும், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடும் மழையுடன் கூடிய மண்சரிவு அபாயம் காரணமாக அப்புத்தளை -கொஸ்லாந்தை – மீறியபெத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 248 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே இம்முறை பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா இதன் போது தெரியப்படுத்தியிருந்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த குடும்பங்களை சேர்ந்த 768 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குடும்பங்கள் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார்.