;
Athirady Tamil News

எரிபொருள் இருப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை

0

அண்மைய காலங்களில் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிபொருளின் நிலைத்திருப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது.

எனவே நாடுகளின் அரசாங்கம் தத்தமது எரிபொருள் இருப்புகளை பாதுகாப்பதில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

மீளவும் கியூ ஆர் முறை
அதன்படி, தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பின்னரும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பதற்கான கலந்துரையாடல்களை எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் நெருக்கடி ஏற்படுமானால் மீளவும் கியூ ஆர் முறை அல்லது வேறு ஏதேனும் விநியோகமுறை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது வரையிலும் எரிபொருள் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்ததிருப்பதால் அதற்கான ஆயத்தங்களும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது சினோபெக் எரிபொருள் நிறுவனமும் வெற்றிகரமாக இயங்கி வருவதனால் எதிர்காலத்தில் எவ்வித நெருக்கடியும் ஏற்படாது எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் முன்னாயத்த திட்டங்களை வகுத்து வைத்திருப்பது தேவையற்ற சிரமங்களை தவிர்க்க உதவும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.