உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்கக் கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளர் ஒருவரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதால் வருமான இலக்குகளை அடைவதில் பாரிய தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படவில்லை.
சட்டத்தின் அடிப்படையில் சில கடமைகளை நிறைவேற்ற நிரந்தர ஆணையாளர் அவசியம் என்பதால், திணைக்களத்தின் செயற்பாடுகளில் பெரும்பகுதி முடங்கியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிரந்தர ஆணையாளருக்கே அதிகாரம்
நிரந்தர ஆணையாளருக்கே, செலுத்தப்படாத வரி நிலுவைகளை வசூலிக்கவும், வங்கிக் கணக்குகளை இடைநிறுத்தவும், புதிய வரிக் கோப்புகளைத் திறக்கவும், வரி செலுத்தத் தவறியவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற மற்றும் வரி மதிப்பீட்டு அறிக்கைகளைத் தொகுக்கும் உத்தரவுகளை வழங்க முடியும்.
எனவே உடனடியாக நிரந்தர ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகிறது.
இந்த ஆண்டு அரசின் வரி வருமான இலக்கு ஆயிரத்து 667 பில்லியன் ரூபாய்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசின் வரி வருமான இலக்கை அடைவதற்கு 466 பில்லியன் ரூபாய் வருமானம் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.