ஒற்றை வானமும் ஒரு பறவையும் – சுவிற்சர்லாந்தில் சிறப்பாக வெளியிடப்பட்ட கவிதைநூல்.
15. 10. 2023 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒருபறவையும் கவிதைநூல் சிறப்பாக வெளியிடப்பட்டது.
சுவிற்சர்லாந்து நாட்டில் பல நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்துவந்த தமிழர்களறி ஆவணக்காப்பகம் 15. 10. 2023 இல் பதிப்பகமாகவும் உருவெடுத்து, ஈழத்துப் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமாரின் ஒற்றை வானமும் ஒரு பறவையும் கவிதை நூலைத் தனது முதற்பதிப்பாக இன்று வெளியிட்டுள்ளது.
தாயகத்து இசைக்கலைஞர்களின் மங்கல இசையுடனும், மங்கல விளக்கேற்றலுடனும் தொடங்கிய நிகழ்வில் சிவஞானசித்தர்பீட நிறுவனர்களில் ஒருவரான திருநிறை. நடராசா சிவயோகநாதன், சைவநெறிக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவருசி. தருமலிங்கம் சசிக்குமார், பேர்ன் வள்ளுவன் பள்ளி ஆசிரியர்களான திருமதி. நந்தினி முருகவேள், திரு. பொன்னம்பலம் முருகவேள், தமிழாசிரியை திருமதி. பிரேமினி அற்புதராசா, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்மஸ், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பெண் அருட்சுனையர் திருமதி. தனவதி மதுகரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, வரவேற்புரையும் வெளியீட்டுரையும் தமிழர்களறி திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டன.
சிவருசி. தர்மலிங்கம் சசிகுமார் அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, கவிதை நூலுக்கான மதிப்பீட்டுரைகள் இடம்பெற்றன. சுக் மாநிலத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியை திருமதி. விக்னேஸ்வரி சிறீகாந்தரூபன் அவர்களும், போராளி செம்பருதியும் மதிப்பீட்டுரைகளை ஆற்றினர்.
மதிப்பீட்டுரைகளைத் தொடர்ந்து, நூல்வெளியீடு இடம்பெற்றது. நூலாசிரியர். திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் நூலை வெளியிட்டு வைக்க சைவசித்தாந்த சித்தர்பீடம் சார்பாக திரு. சிவயோகன் அவர்கள் நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்பஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். போர்க்காலப் படைப்புகளின் சிறப்புகளையும், படைப்புகள் கொண்டிருக்கவேண்டிய மனிதத்தின் தேவைகளையும் அவர் தன்னுரையில் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து நூலாசிரியர் உரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் ஆற்றினார்.
விடுமுறை நாளிலும் இலக்கிய ஆர்வலர்களும் நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு, அரங்கை நிறைத்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கவிஞையும், தமிழ்ப்பாடசாலை ஆசிரியையுமான திருமதி. சிவதர்சினி இராகவன் நிகழ்வினை தனது அழகுதமிழில் சிறப்பாகத் தொகுத்தளித்தார்.
விழாவின் நிறைவாக, வருகை தந்த அனைவருக்கும் தமிழர்களறி நண்பகல் உணவளித்து, தமிழினத்தின் விருந்தோம்பற் பண்பினை வலுப்படுத்தியது.