முப்பத்தாறு வருட கல்விப் பணியாற்றி ஓய்வு பெறும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜெயக்கொடி டேவிட் அவர்கள் !!
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்தில் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளராக தற்போது சேவையாற்றி வரும் ஜெ.டேவிட் அவர்கள் சொறிக்கல்முனை கிராமத்தில் யுவான்பிள்ளை கிறகோரி, செபதேயு றோஸ்மேரி தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக 24.10.1963ல் பிறந்தார். றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் உயர்தரமும் கற்று போட்டிப்பரீட்சை மூலம் 07.08.1988 ஆசிரியராக நியமனம் பெற்றார்.
1992களில் யாழ் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விவசாய விசேட பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட அசிரியரானார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டதாரியானதுடன் கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலையில் தமிழ்மொழியும் இலக்கியமும் முதுமாணிப்பட்டம் பெற்றார். தேசிய கல்வி நிறுவக பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் சிறப்பு சித்தி பெற்ற இவர், ஆசிரியராகவும் கடமை நிறைவேற்று அதிபராகவும் தாம் பிறந்த மண்ணின் ஹொலிகுறொஸ் வித்தியாலயத்தில் அரும்பணிகளாற்றினார். தொடர்ந்து சம்மாந்துறை கல்வி வலயத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராக சுமார் பன்னிரண்டு வரடங்களுக்கு மேல் அர்ப்பணிப்பான சேவைகளாற்றி பாடத்திலும் பாட இணைச் செயற்பாடுகளிலும் உயர்ந்த பெறுபேறுகள் கிடைக்க வழி செய்தார். தொடர்ந்தும் இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று தரம் பெற்ற அதிபராகி கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தை சுமார் எட்டு வருடங்கள் வழி நடாத்தி பல் சாதனைகள் ஏற்படுத்தினார். இதனால் 2014, 2015, 2016 ஆண்டுகளில் கல்வியமைச்சினால் மிகச்சிறந்த அதிபருக்கான “பிரதீப பிரபா’வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
2019ல் கோட்டக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று காரைதீவுக் கோட்டத்தை கல்வியிலும் பாடஇணைச் செயற்பாடுகளிலும் உயர் நிலையடையச் செய்தார். கல்விப்புலத்தில் ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, கோட்டக்கல்விப்பணிப்பாளராக என பல பங்குகளை ஏற்று முப்பத்தாறு வருடகாலம் உயர்ந்த சேவைகளையாற்றி 24.10.2023 அன்றுடன் ஓய்வு பெறுகின்றார் ஜெ.டேவிட்.
கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஜெ.டேவிட் பன்முக ஆளுமை கொண்டவர். எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், நடிகர், இசை வல்லுநர், நெறியாளர், கவிஞர் எனப்பல ஆளுமை மிக்கவர். பைந்தமிழ்க்குமரன் எனும் புனை பெயரில் எழுதி வரும் இக்கல்விமானை தொண்டன் சஞ்சிகை சார்பில் ஆயர் அதிவண ஜோசப் பொன்னையா ஆண்டகை உலகத்தொடர்பு தின விழாவில் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவித்தார். இவரது முதலாவது சிறுகதைத்தொகுதி 2015ம் ஆண்டு கானல் வசந்தங்கள் எனும் பெயரில் வெளிவந்தது. இந்நூலுக்கு 2016ல் கொடகே சாகித்ய விருதும் கிடைத்தது. 2017ல் மண்மாதா எனும் கவிதை நூலை பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களது கனதியான அணிந்துரையுடன் வெளியிட்டார். இந்த வருடம் 2023ல் கறையான் தின்ற கனவுகள் எனும் சிறுகதைத் தொகுதியையும் படைத்தளித்துள்ளார். மேலுமாக பைந்தமிழ்க்குமரன் ஜெ.டேவிட் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் தாமே எழுதி நெறியாள்கை, ஒப்பனை. பின்னணி இசை வழங்கி மேடையேற்றிய ‘அக்கினி யாத்திரை’ நாடகம் 2018 ல் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்று பல பரிசுகளை அள்ளி வந்தது. 2018.03.25 அன்று மலையக கல்வி கலாசார சங்கம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு விழாவில் தேசாபிமானி கல்வித்தீபம் விருது வழங்கி கொரவித்தது.
யாகம், வேள்வி. விடியலும் சுடும், கோபுரங்கள் போன்ற இவரது நாடகங்கள் நாட்டின் பல் இடங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றவையாகும். இவர் விளையாட்டுத்துறையிலும் சளைத்தவரல்ல. சாந்த குருஸ் விளையாட்டுக்கழக ஸ்தாபக் உறுப்பினரான இவர் யாழ் உதைபந்தாட்ட மத்தியஸ்த சங்கத்தில் இணைந்து பயிற்சி பெற்று சிறந்த உதைபந்தாட்ட நடுவராகவும் உள்ளார். இத்தகைய சிறப்புகளுக்கு சொந்தக்காரர் முப்பத்தாறு வருட கால கல்விப்பணியாற்றி 24.10.2023 ல் அகவை அறுபதில் ஓய்வு பெறுகின்றார். இவரது மனைவி மேரி சாந்தி கிருஸ்ணகுமாரி ஆசிரிய ஆலோசகராவார். கணணி விஞ்ஞானத்துறை பொறியியல் மாணவன் துஷான் ஜெஸ்லி, கிஷானிகா எனும் இரண்டு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர். சிறந்த கடமையுணர்வும், நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட இத்தகைய கல்விமான் உடல் உள நலன்களுடன் நீடுழி வாழ வேண்டுமென்று கல்விச்சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.