அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத காவல்துறையினர் : சாணக்கியன் கண்டனம்
மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் காவல்துறையினருக்கு அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி காவல்துறையினர் செயற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(18) ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே சாணக்கியன் இராசமாணிக்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
காவல்துறை மா அதிபரின் நியமனம்
“நாட்டில் காவல்துறை மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது.
நாட்டின் அதிபர் தற்போது நாட்டில் இல்லை. நாட்டின் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை.
அத்துடன் காவல்துறை மா அதிபரின் நியமனமும் சட்டவிரோதமானது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது.
இதேவேளை அதிபர் வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னுமொரு தரப்பு கூறுகின்றது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை அதிபர் கூட்டமொன்றை நடத்தி கூறிவற்றை இன்று வரையில் காவல்துறையினரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.
காவல்துறைமா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது.” என கேள்வியெழுப்பியுள்ளார்.