தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க முயலும் ரணில் : மனோ கணேசன் குற்றச்சாட்டு
தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில், நடைபெற்ற, தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, 13Aநடைமுறை, 13Aஇல் காவல்துறை, காணி பிரச்சினைக்கு தீர்வு என அதிபர் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்தார்.
விக்னேஸ்வரனை அழைத்துக்கொண்டு
விக்கினேஸ்வரன் எம்.பியை துணைக்கு அழைத்துக்கொண்டு வடக்கில் மாகாண நிர்வாக குழு அமைப்போம் என வாக்குறுதி அளித்தார். தொல்பொருள் திணைக்களத்தை அழைத்து காணிகளை விடுவியுங்கள் என கட்டளை இட்டார். திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகினாரே தவிர அதிபரின் கட்டளையை நிறைவேற்றவில்லை.
தற்போது கரு ஜயசூரியவை துணைக்கு
பிறகு அவரது அரசாங்கம் தேர்தல்களை பின்போட சர்வஜன வாக்கெடுப்பு என்று பேசுகிறது. இப்போது அதிபர் முறைமையை அகற்றப் போகிறேன் என்கிறார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை துணைக்கு அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சொல்லாமல் சொல்கிறார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவில் இருந்து நாடு திரும்பியவுடன் அவரை சந்தித்து தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை எழுப்பவுள்ளேன். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை தொடர்பில், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் இருந்தாலும் அவர் என்னிடம் சொல்வார் என நம்புகிறேன் என்றார்.