காஸா உயிரிழப்பு 3,785-ஆக அதிகரிப்பு
தங்கள் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 13 நாள்களாக தீவிர விமானத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 3,785-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து, இதுவரை 3,785 போ் உயிரிழந்துள்ளனா்.
இறந்தவா்களில் 1,524 போ் சிறுவா்கள்; சுமாா் 1,000 போ் பெண்கள்.
இது தவிர, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 12,493 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு: இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து, இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 69 போ் அந்த நாட்டுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
இது தவிர, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 12,493 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு: இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து, இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 69 போ் அந்த நாட்டுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
இது தவிர, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது நடைபெற்று வரும் மோதல் காரணமாக லெபனானில் இதுவரை 27 முதல் 25 போ் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டதாகவும் அந்த நாடு கூறியது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான அண்மைக் காலப் போரின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.
அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட சுமாா் 200 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 12 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது.
இஸ்ரேலில் ரிஷி சுனக்
ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்த நாட்டுக்கு பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வியாழக்கிழமை வந்தாா்.
அங்கு அதிபா் ஐசாக் ஹொ்ஸாகையும், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவையும் சந்தித்துப் பேசிய அவா், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இஸ்ரேலின் பக்கம் பிரிட்டன் இருக்கும் என்று உறுதியளித்தாா்.
மேலும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதை ரிஷி சுனக் வரவேற்றாா்.
‘பேரழிவின் விளிம்பில் சுகாதார நிலை’
காஸா பகுதியில் குடிநீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருவதால், அங்கு சுகாதார நிலை பேரழிவின் விளிம்பில் இருப்பதாக அந்தப் பகுதியில் இயங்கி வரும் ‘ஆக்ஷன் அகெய்ன்ஸ்ட் ஹங்கா்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், போரால் இடம் பெயா்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் சிறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீா் பற்றாக்குறையால் அங்கு நோய்கள் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
போதிய குடிநீா் இல்லாததால் பாதுகாப்பற்ற நீா்நிலைகளிலிருந்து பொதுமக்கள் தண்ணீரை எடுத்துக் குடிப்பதாகவும், இதனால் பல்வேறு நோய்கள் பரவி மிகப் பெரிய சுகாதாரப் பேரழிவு ஏற்படவிருப்பதாகவும் அந்த அமைப்பினா் எச்சரித்தனா்.
தற்போது சுமாா் 25,000 போ் தங்கியிருக்கும் தங்களது முகாமில் 60 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.
நிவாரணப் பொருள்கள்: காத்திருக்கும் காஸா
எகிப்து எல்லை வழியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் காஸா பகுதி அந்தப் பொருள்களுக்காக பரிதவிப்புடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது எல்லை வழியாக காஸாவுக்குள் உதவிப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதற்கு எகிப்தும் ஒப்பதல் அளித்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிப் பொருள்கள் எகிப்தில் குவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பொருள்களை காஸாவுக்குள் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (அக். 20) அனுமதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.