மொத்தம் ரூ.10,000 கோடி மதிப்பு.. 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்!
2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பிழந்த நோட்டுகள்
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும்,
அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மக்கள் அனைவரும் வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொண்டனர், இதற்காக வங்கியில் சொரப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்நிலையில், இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யவும்,மாற்றிக் கொள்ளவும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தனிநபர்கள், தாங்கள் வைத்துள்ள ரூ.2,000 நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்தி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, “ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் இன்னும் மக்களிடத்தில் உள்ளன. அவை வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.