விளையாட்டு செயலிகள் ஊடாக பாரிய பணமோசடி : விழிப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை
விளையாட்டு செயலிகள் ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது, இதனால் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கி பலர் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறு தொகைப் பணம்
குறித்த அந்த விளையாட்டுச் செயலிகளில் இணைந்து கொள்பவர்கள் அங்கு ஒரு சிலருடன் இணைந்து கொண்டு குழுவாக்கப்படுகின்றனர்.
விளையாட்டில் இணையும்போதே ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குகளுக்கு வழங்கப்பட்டு விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
அதேபோல் அந்த குழுவில் அதிகளவானோர் இருப்பதாக காண்பிக்கப்பட்டு அவர்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அதன் பின்னர் விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின்போதும் ஒரு தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அதில் சிறு தொகை உடனடியாகவே மீளவும் விளையோடுவோரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்படும்.
தொடக்கத்திலே விளையாடுபவர்கள் அதிகளவு பணத்தை வெல்வதைப்போல் காண்பிக்கப்பட்டு அவர்கள் விளையாட்டின்பால் ஈர்க்கப்படுவார்கள்.
அதனால் ஏற்படும் நம்பிக்கையால் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தி விளையாடத் தூண்டப்படுவார்கள், அதன் படி விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின் போதும் செலுத்த வேண்டிய தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
விளையாட்டுப் படிமுறைகள்
இது இலட்சங்களை எட்டும்போதும் கணக்கில் சிறியளவு தொகையேவரவாக கிடைக்கும், உதாரணமாக 40 இலட்சம் ரூபாவை ஒருவர் செலுத்தினால் அவரது கணக்கில் சில லட்சங்கள் மாத்திரமே உடனடியாக வரவு வைக்கப்படும்.
விளையாட்டில் வெற்றிபெற்றால் வெற்றித் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும், அதன் பின் ஒருவர் பெருந்தொகையை தனது கணக்கில் வைப்பிலிடும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் படிமுறைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டுக் குழுவில் இருந்து அவர்கள் நீக்கப்படுகின்றனர்.
இதனால் இந்த விளையாட்டை நம்பிப் பெருந்தொகையான பணத்தைச் செலுத்தும் பலர் பணத்தை இழந்து விடுவார்கள்.
இத்தகைய குற்றச் செயல் தொடர்பாக எவர் மீதும் குற்றச்சாட்டினை பதிவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனென்றால் அந்தக் குழுவில் உள்ளவர்களிடையே பணம் பரிமாற்றப்பட்டு, ஒரு சங்கிலித் தொடராக இது மேற்கொள்ளப்படுவதால் இறுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்வது யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமானது என்பதால் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் உள்ளதாக காவல்துறை அத்தியேர்சகர் தெரிவித்துள்ளார்.
தவறான முடிவுகள்
எனவே இவ்வாறான விளையாட்டுச் செயலிகள் மூலம் நடக்கும் பண மோசடி தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தப் பண மோசடியில் பலர் சிக்கியுள்ளபோதும் அவர்களால் இது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது என்ற சிக்கலாலேயே பலர் இது தொடர்பில் மௌனமாக இருபதாகவும் இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பல்வேறு தவறான முடிவுகளை எடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் பின்னணியும் இந்த விளையாட்டு மோசடியில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே மக்கள் இவ்வாறான செயலிகளை உபயோகப்படுத்தாது தவிர்ப்பது புத்திசாலித்தமானது என்றும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.