கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமாரா
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவை சிசிரிவி கமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்டெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பது நாள் செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பதாம் நாள் நிறைவுடன் மொத்தமாக 17 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்படுவதாகவும் அகழ்வில் ஈடுபட்டிருந்த ராஜ்சோமதேவ குழுவினர் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு செல்ல இருப்பதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை, தற்போது மழை காலம் ஆகையால் தொடர்ச்சியாக அகழ்வுபணி நடைபெறுமா? அல்லது இடைநடுவில் விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என கூறியுள்ளதாகவும் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும் , உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .