ஆடை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட மாற்றம்!
இந்த ஆண்டுக்கான (2023) ஆடை ஏற்றுமதிக்குரிய வருமானம் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய ஆடை மன்றம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்றுமதிக்கான தரவுகளின்படி, இலங்கையின் ஆடைத் தொழில் துறை கடந்த ஆண்டு (2022) 5.95 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றிருந்தது என்றும் ஐக்கிய ஆடை மன்றத்தின் உப தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகள்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இந்த ஆண்டுக்கான ஆடை ஏற்றுமதி துறை வருமானம் குறைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நெருக்கடியை சமாளிக்க பாரம்பரிய சந்தைகளுக்கு மேலதிகமாக ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மன்றத்தின் உப தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆடைத் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் 85 வீதமானவர்களாக பெண்கள் இருப்பதாகவும், அவர்களில் 80 வீதமானவர்கள் கிராமப்புற பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் கிராமப்புற பெண் வேலைவாய்ப்பு 34.3 வீதமாக உள்ளதாகவும் அதில் 27.7 வீதமானவை ஆடைத் தொழில்துறையில் உள்ளதாகவும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நாட்டில் கிராமப்புற தொழில்களில் ஆடைத் தொழில்துறை அதிக வேலைவாய்ப்பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.