;
Athirady Tamil News

சமயோசித அணுகுமுறையூடாகவே தமிழர்களுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

0

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் – எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதை தவிர எதனையும் சாதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமயோசித அணுகுமுறையூடாக தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, பல்வேறு திணைக்களங்களினால் காணி அடையாளப்படுத்தப்படுதல், விகாரைகள் அமைத்தல், மேய்ச்சல் தரை உட்பட பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.

தற்போதைய அரசியல் சூழலில் இவற்றையெல்லாம் சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை அனுபவங்களின் அடிப்படையில் நம்புகின்றேன். மேலும் போராடுவதற்கான உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதை வழிநடத்துபவர்கள் எத்தகைய நோக்கத்தை கொண்டுள்ளார்கள் என்பதை பொறுத்தே இலக்கின் தன்மையும் அடையும்.

இதற்கு எமது உரிமைப் போராட்டம் ஒரு சான்றாகும். மாறாக பேச்சுவார்த்தைகள் மூலமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டே நான் ஆயுதப் போராளியாக இருந்து இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செய்ற்பட்டு வருகின்றேன்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு
இதேநேரம் எமது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை தர அன்றைய அதிபர் சந்திரிகா அம்மையார் முன்வந்தபோதிலும் அதை அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் இருந்த தரப்பினர் தடுத்து நிறுத்தினர். அதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

அதேநேரம், சந்திரிக்கா அம்மையார் தழிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஒரு அற்புதமான ஒரு தீர்வை தர முயன்றபோது, ‘தந்ததை வாங்கி தலை குனிந்து கொள்வதற்கு எங்களின் தலைவன் அரபாத் அல்ல’ என்று உசுப்பேத்துகின்ற கவிதை வரிகளை ஒரு கவிஞனின் குரல் வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்பின்னரான விளைவுகள் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். சந்தர்ப்பங்களை எல்லாம் கைநழுவ விட்டுவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் இந்த தீராப்பிரச்சினைக்கும் காரணம்.

தமிழ்க் கட்சிகளது நிலைப்பாடு
இதேநேரம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இலக்கை முன்வைத்து, தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது என்ற மூன்று அம்ச நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, எமது அரசியல் பயணத்தை நெறிப்படுத்திக் கொண்டுவருகின்றோம்.

எமது அரசியல் நிலைப்பாட்டையும் எள்ளிநகையாடிய இதர தமிழ் இயக்க கட்சிகள், இன்று காலம் கடந்து எமது நிலைப்பாட்டிற்கே வந்திருக்கின்றன.

ஆனால், இதில் இன்றும் தமிழ்க் கட்சிகளது எண்ணங்களும், சிந்தனைகளும் உண்மைத் தன்மையாக இருக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வாருங்கள். மாறாக புதுப்புதுப் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை கொதிநிலை பிரச்சினை ஆக்கி எந்தவொரு தீர்வையும் பெற்றுவிட முடியாது.

இன்று காணப்படும் அநோக அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும் என நான் நம்பகின்றேன். அவ்வாறு அவற்றுக்கு தீர்வு கிடைக்கும்போது, ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு.

தற்போது முன்னெடக்கப்படுகின்ற கடையடைப்பு மற்றும் சங்கிலிப் போராட்டங்கள் என்பன பிசுபிருத்து போனதற்கு அதை முன்னெடுத்துச் சென்ற தரப்பினரது நோக்கங்களே காரணமாக அமைந்தது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.