;
Athirady Tamil News

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை

0

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண கடற்றொழில் பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சியில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களது பிரச்சினை
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய கடற்றொழில் அமைச்சர் கடந்த வாரம் உங்களை சந்தித்து இந்திய இழுவைப்படகுகளால் வடக்கு கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையில் ஐ.நா தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என தங்களிடம் மனு அளித்துள்ளார்.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், வடக்கிலே அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள், தடைசெய்யப்பட்ட உள்ளூர் தொழில்முறைகள் என்பவற்றால் வடக்கு மாகாண கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் நாசமாக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது, இவற்றை மூடிமறைக்கவே இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினையை மட்டும் பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

கடற்றொழில் அமைச்சர்
நாங்கள் உங்களை சந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். நீங்களும் எங்களை சந்திக்கும் நிலையும் இதுவரை இல்லை. ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாங்கள் உங்களிடம் இந்த விடயங்களை முன்வைக்கின்றோம். முக்கியமாக யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் சட்டவிரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களுடைய பாரம்பரிய கடற்றொழிலாளர்களையும் எங்களது இருப்பையும் அழிக்கும் வேலையை சீனாவோடு இணைந்து கடற்றொழில் அமைச்சர் செய்து வருகின்றார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2017 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்ளூர் இழுவைமடி சட்டம் புத்தளத்தில் நடைமுறையில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இல்லை. இதற்கு கடற்றொழில் அமைச்சும், அமைச்சருமே காரணம்.

உள்ளூரிலே தடைசெய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளை தடைசெய்து உள்ளூர் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்துங்கள்.உள்ளூரிலே கடற்றொழிலாளர்கள் நாங்கள் நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த கடற்றொழில் திணைக்களத்தினாலும் பணிப்பாளர் நாயகத்தினாலும் கடற்றொழில் அமைச்சினாலும் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருகடிகளில் இருந்து எங்களை காப்பாற்றுமாறும், எங்களது கடலில் நாங்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநி ஆகிய நீங்கள் கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்பது வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களாகிய எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் வடக்கு மாகாணத்திற்கு வரும்போது கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை நேரில் சந்தித்து கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதனையும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பில் தயவாக கோரிநிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.