சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு
தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது சம்பந்தன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த உரையாடலின்போது, தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டுமென பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமான அறிவிப்பு
தொலைபேசி உரையாடல் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,
“சம்பந்தன் தொலைபேசி மூலமாக என்னுடன் உரையாடினார். அதன்போது சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றியிருந்தார்.
எனினும், தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு கோரியுள்ளார். அதற்கமைவாக அவருடன் விரிவானதொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளேன்.
அதன் பின்னரேயே இந்த விடயம் சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுக்கவுள்ளேன்” என்றார்.