இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் – அதெப்படி?
இரண்டு நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் பார்லே நகரம் குறித்த சுவாரஸ்ய தகவல்.
பார்லே நகரம்
ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு நகரம் தான் பார்லே. இது பெல்ஜியம் மற்றும் ஹாலந்துக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக விளங்கும் இந்த நகரத்தின் “நஸ்ஸாவ்” என்ற ஒரு பகுதி நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது.
மறுபாதி பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ளது. பார்லே நகரத்தில் கிட்டத்தட்ட 8,000 மக்கள் வசிக்கின்றனர். தெளிவாக சொல்லப்போனால் பெல்ஜியமின் 22 பகுதிகள் நெதர்லாந்தில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நெதர்லாந்தின் 7 பகுதிகளும் பெல்ஜியமில் உள்ளன.
இந்த நகரத்தில் எல்லாமே இரண்டாக இருக்கும். அதவாது, 2 விதமான காவல் படைகள், 2 தேவாலயங்கள், 2 அஞ்சல் நிலையங்கள், 2 மேயர்கள் என அனைத்துமே இந்நகரத்தில் இரண்டாக இருக்கும். மேலும் இந்த நகரத்தில் இருக்கும் சில வீடுகள் கூட இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
அழகான அனுபவம்
அவற்றில் வீட்டின் ஒரு பாதி ஒரு நாட்டிலும், மற்றொரு பாதி இன்னொரு நாட்டிலும் உள்ளது. இதற்கான காரணம், 1998ம் ஆண்டு அந்த நிலபகுதியை ஆட்சி செய்த 2 ஆட்சியாளர்கள், நிலப் பகுதியை பல்வேறு பகுதிகளாக பிரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன் காரணமாகத்தான் இந்த நகரம் இப்படிப்பட்ட ஒரு சிறப்பை பெற்றுள்ளது. மேலும், இந்த நகரத்திற்கு நீங்கள் சுற்றுலா சென்றால் எந்த நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை எளிதாக கண்டுகொள்ள நெதர்லாந்து நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் கட்டிடங்களில் NL என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது .
பெல்ஜியம் பகுதியை சேர்ந்த கட்டிடங்களில் B என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு எல்லையில் அமைந்துள்ளதால், மிக அழகான பார்லே நகரத்து மக்களுக்கு 2 நாட்டிலும் இருக்கும் அனுபவம் கிடைக்கிறது.